இறுதிக்கட்ட போரின் போது போர்குற்றங்கள் நிகழ்ந்தன! - ஏற்றுக்கொண்டது ராஜபக்ஷ அரசு
இலங்கை இராணுவத்தினர் போர்க்குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டமை குறித்து ராஜபக்ஷ தரப்பினர் முதன்முறையாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, இறுதிக்கட்ட போரின் போது போர்க்குற்றங்கள் இடம்பெற்றமையை ஏற்றுக் கொண்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் இறுதிக்கட்ட போரின்போதும் அதன் பின்னரான காலப்பகுதியில் இராணுவத்தினர் தவறிழைத்தனர் என பசில் தெரிவித்துள்ளார்.
யாழில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, பசில் இந்த தகவல்களை வெளியிட்டார்.சர்வதேச நீதிமன்றில் இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சாட்சியம் வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளமை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.இதன்போது, இறுதிக்கட்ட போரின் போது இராணுவத்தினர் போர்க்குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டமையை பசில் ஒப்புக்கொண்டுள்ளார்.
இராணுவத்தினர் இவ்வாறு நடந்து கொள்வார்கள் என நாம் நினைக்கவில்லை. இது சிலரின் தேவைக்கு ஏற்ப மேற்கொண்டிருக்கலாம். எனினும் இது குற்றமாகும்.ஆனாலும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் கருத்து தொடர்பில் மகிழ்ச்சியடையவில்லை. இறுதிக்கட்ட போரின் போது இராணுவத்தினருக்கு தலைமைத்துவம் வழங்கிய நபர் இவ்வாறாக கருத்து வெளியிட்டிருக்க கூடாதென பசில் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.
போர்க்குற்றம் தொடர்பில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வெளியிட்ட குற்றசாட்டை, பசில் ராஜபக்ஷவின் கருத்து உறுதி செய்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த யுத்த காலத்தினுள் பாதுகாப்பு இராணுவத்தினர் போர்க்குற்றங்களை மேற்கொண்டதாக ராஜபக்ச ஆட்சியின் முக்கிய அமைச்சர் ஒருவர் ஏற்றுக் கொண்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.








