அமெரிக்காவில் சாதனை படைக்கும் யாழ் மாணவன்.!
அமெரிக்காவில் நியூஜெர்சி மாநிலத்தில் தற்பொழுது வசித்துவரும் யாழ்ப்பாணம் அளவெட்டியைச் சேர்ந்த ஈழத் தமிழர்கள் நிர்மலா, செல்லையா ஞானசேகரனின்   மகன்   மகிஷன் ஞானசேகரன்   சமூகநல  செயற்பாடுகளில் மிக ஆர்வமாகச் செயற்பட்டவர். 
இலங்கையில் பிறந்து அமெரிக்கா வில் வசித்துவரும்   மகிஷன் ஞானசேகரன்  தமிழ் மொழியில் சரளமாகப் பேசக்கூடியவர். ஸ்பானிஷ் மொழியையும் ஆர்வமாக பயின்றவர். 
2016 ஆகஸ்ட் மாதம்  அமெரிக்க மாநிலமான நியூஜெர்சியின் உயர்நிலைக்  கல்விப் பிரிவில் பயிலும் மாணவர்களில் கல்வி, சமூக சேவை, மாணவ தலைமைத்துவம் ஆகிய துறைகளில் முதல் நிலை  மாணவராக  விசேட  தேர்வு  மூலம் தெரிவு  செய்யப்பட்டு அம்மாநிலத்தின் பிரதிநிதியாக அமெரிக்க தலைநகர்  வாஷிங்டன்   D.C  யில் அமைந்துள்ள வெள்ளை மாளிகைக்கு அழைக்கப்பட்டு அங்கு ஒருவார காலம் தங்கியிருந்த மகிஷன் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி   பராக் ஒபாமா, உயர் நீதிமன்ற நீதியரசர்கள், சட்ட சபை உறுப்பினர்கள் ஆகியோரை நேரடியாக சந்தித்து மாணவ தலைமைத்துவம், சமூகநல செயற்பாடுகளில் மாணவர்களின் பங்களிப்பு போன்ற முக்கிய விடயங்களைப்பற்றி கலந்துரையாடியுள்ளார். 
சமூகப்பணி  தொடர்பான செயல்முறைப் பயிற்சி  மற்றும் பொதுவாழ்வில் ஈடுபட்டு சமூகப்பணியாற்ற விரும்பும் இளைஞர்கள் இந்த வாய்ப்பினைப் பெறுவது மிகவும் பெருமைக்குரிய சாதனையாகும். அமெரிக்க நாட்டின் எதிர்காலத் தலைவர்கள் என்ற ரீதியில் இந்த இளைஞர்கள் தயராகுவார்கள். 
இந் நிகழ்வுக்கு தமிழ் மாணவன் ஒருவர் தெரிவு செய்யப்பட்டது இதுவே முதல் தடவையாகும். இந்நிகழ்வானது தமிழ் மக்களுக்கு கிடைத்த பெருமையும்  அங்கீகாரமும்  ஆகும். 
இத்தகுதியை மகிஷன் அடைவதற்குக் காரண ம்  நடுநிலை கல்வி நாட்களில் இருந்தே இவர் தொடர்ந்து காட்டிய சமூகநல அக்கறை கொண்ட பல செயல்களும் பணிகளுமாகும். 
இவை யாவும் படிப்படியாக  இவரை உயர்த்தியுள்ளது. பத்து வயதில் வானி யல் வல்லுநராகப் பணியாற்றுவதில் ஆர்வம் கொண்ட மகிஷனின் நோக்கம் பிற்காலத்தில் ஒரு கோளையோ, விண்கற்களையோ கண்டு பிடிக்க வேண்டும் என்று துவங்கியது.  
நூலகம் ஒன்று நடத்திய வாசிப்பு போட்டியில் பங்குபற்றி,   மூன்று மாத காலத்தினுள் நூலகத்தின் 1,000 புத்தகங்களைப்  படித்தமைக்காக நகர ஆட்சியாளரிடம் இருந்து பரிசும், சிறந்த கவிதை  ஒப்புவித்தமைக்காக தங்கப்பதக்கமும்   மற்றும்   மூன்று “உச்சரிப்புத் தேனீ” (Spelling Bee) போட்டிகளில் பரிசுகள் என்று கல்விக்கான தகுதிகளை வளர்த்துக் கொண்டு பல போட்டிகளில் வெற்றிகளை தனதாக்கிக் கொண்டார். 
 சிறு வயதிலிருந்து தனக்கு  உதவிய  பொது  நூலகம் பொருளாதாரப் பற்றாக்குறையால் நிதியின்றி மூடப்பட்ட பொழுது அது ‘மனித குலத்திற்கு எதிரான குற்றம்’ என மிகவும் இளவயதிலேயே தனது கருத்தைத் தயக்கமின்றிப் பதிவு செய்தவர் மகிஷன். 
 

 
 
 
 
 
 











