முள்ளிவாய்க்காலில் மீட்கப்படாத வெடிபொருள் எச்சங்களால் மக்கள் அச்சம்!
முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பகுதியில் உக்கிர மோதல்கள் இடம்பெற்ற பகுதிகளில் கைவிடப்பட்டுள்ள வெடிபொருள்களின் எச்சங்களின் சிதறல்களால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
வெடிபொருள்கள் மீட்பு, வெடிப்பு போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக முள்ளிவாய்க்கால் வலைஞர்மடம், வட்டுவாகல், புதுமாத்தளன் போன்ற பகுதிகளில் இடம்பெற்றுவருகின்றன. இந்தநிலையில் நேற்றுமுன்தினம் காலையும் வீட்டுத்தோட்டத்தைத் துப்பரவு பணிசெய்து தீ மூட்டியபோது வெடிப்புச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளதுடன் அயலிலுள்ள வீடுகளுக்கு சிறு பாதிப்புக்கள் ஏற்பட்டபோதும் உயிராபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் பகுதியில் கடந்த 2012ஆம் ஆண்டு வெடிபொருட்கள் அகற்றப்பட்டு மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதிகளில் வெடிபொருள்கள் முற்றாக அகற்றப்பட்டுள்ளன என அறிவிக்கப்பட்டுள்ள போதும் வெடிபொருட்களின் எச்சங்கள் காணப்படுகின்றன. இதுவரை 50க்கும் மேற்பட்ட இவ்வாறான வெடிப்புச் சம்பவங்கள் மற்றும் வெடிபொருட்கள் மீட்கும் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
தற்போது மக்கள் வாழ் இடங்களில் வீடு கட்டுவதற்காகவும், ஏனைய தேவைகளுக்காகவும் நிலத்தைத் தோண்டுகின்றனர். அத்துடன் காடு எரிக்கும் போதும் சில வெடிபொருட்கள் வெடித்துச் சிதறுகின்றன.
மக்களால் அடையாளம் காணப்பட்ட சில வெடிபொருட்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டு பின்னர் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய எடுக்கப்பட்டு அழிக்கப்படுகின்றன. ஆனால் அடையாளம் காண ப்படாத வெடிபொருட்களால் அச்சத்துடன் வாழவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.