வடக்கு, தெற்குக்கு வெவ்வேறு சட்டங்களா?
நாட்டில் தற்போது இரண்டு வகையான சட்டங்கள் அமுல்படுத்தப்படுகின்றன. வடக்கில் ஒரு சட்டமும் தெற்கில் மற்றுமொரு சட்டமும் நடைமுறைப்படுத்தப்படுவதாக கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று பத்தரமுல்லையிலுள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. அந் நிகழ்வில் கலந்து உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார்.
மேலும் குறிப்பிடுகையில்,
நல்லாட்சி அரசாங்கம் ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ரத்துபஸ்வெல சம்பவம் பற்றி பேசியது. எனினும் நேற்று (நேற்று முன்தினம்) தம்புத்தேகமயில் விவசாயத்திற்காக நீர் கேட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட பதிலை அவதானிக்க முடிந்தது. பொலிஸாரைக்கொண்டு அம்மக்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
ஆகவே பொலிஸார் வடக்கில் ஒரு விதமாகவும் தெற்கில் மற்றொரு விதமாகவும் செயற்படுகின்றனர். வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் இராணுவ முகாமிற்கு முன்னாள் ஆர்ப்பாட்டம் செய்கின்ற போதும், வடக்கு மாகாண அமைச்சர் தேசிய கொடியை ஏற்ற முடியாதெனக் குறிப்பிடுகின்ற போதும் அவற்றை சாதாரண செயற்பாடாகவே அரசாங்கம் கருதுகிறது.
ஆனால் தெற்கில் மக்கள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்கின்ற சந்தர்ப்பங்களில் அவ் ஆர்ப்பாட்டக் காரர் கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். மத்தள விமான நிலையத்தை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ய வேண்டாம் என ஆர்ப்பாட்டம் செய்த போது பாராளுமன்ற உறுப்பினர்களை யும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அத்துடன் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் திகதிக்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சி எவ்வாறு துண்டு துண்டாகப் பிரிந்து கிடந்ததோ அவ்வாறான நிலையை தற்போதும் அடைந்துள்ளது. அக்கட்சிக்குள் உட்பூசல் அதிகரித்து வருவதாகவும் மேலும் தெரிவித்தார்.