Breaking News

ஒற்றுமை பற்றி இப்போதுதான் புரிகிறதா?

தமிழ்த் தலைவர்கள் பிரிந்து செல்வார் களாக இருந்தால்
அது தமிழினத்தின் அழி வுக்கே வழிவகுக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தர் கூறியுள்ளார்.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களின் நூல் வெளியீடு நேற்று முன்தினம் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றபோது, அதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இரா.சம்பந்தர் அவர்கள் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

ஒற்றுமை பற்றிக் கூறுவதென்பது ஏற்புடைய கருத்து என்ற அடிப்படையில் சம்பந்தர் கூறிய கருத்தை எவரும் நிராகரிக்க மாட்டார்கள் என்பது நிறுதிட்டமான உண்மை. பொதுவில் அரசியல்வாதிகள் விலக்க முடியாத சில கருத்துக்களை முன்வைத்து தங்களின் அரசியல் ஏற்ற இறக்கங்களை சீராக் கிக்கொள்வர்.

அந்தவகையில்தான் தமிழ் அரசியல் தலைவர்களின் ஒற்றுமை பற்றி இரா.சம்பந்தர் கருத்துரைத்துள்ளார். தமிழ் அரசியல் தலைவர்கள் ஒற்றுமை யாக இருக்காவிட்டால் தமிழினம் அழிந்து விடும் என்பது அவரின் எச்சரிக்கை. இந்த எச்சரிக்கை ஒன்றும் புதியதல்ல.

அப்படியாயின் இரா.சம்பந்தர் அவர்கள் ஒற்றுமை பற்றி ஏன் அழுத்திக் கூறினார் எனில், தனது உரை நியாயமானது. அந்த உரையை எவரும் நிராகரிக்க முடியாது, அவ்வாறு யாரேனும் நிராகரிக்க முற்பட்டால், முற்பட்டவர் வெகுசன விரோதியாகுவார்.

தவிர, தமிழ்த் தலைவர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என 2018ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் கூறியிருந்தேன் என எதிர்காலத்து நியாயப்படுத்தலுக்கும் அதனைப் பயன்படுத்த முடியும்.

இந்த வகையில்தான் தமிழ்த் தலைவர்களின் ஒற்றுமையின் அவசியத்தை சம்பந்தர் மீள்வலியுறுத்தலுக்கு உட்படுத்தினார். இவ்வாறு ஒற்றுமை பற்றிக் கூறுவதனூடு; புதிய கட்சியை ஆரம்பிக்கும் நோக்கம் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு இருந்தால் அதனை வெட்டிவிடுவதுதான் சம்பந்தரின் தந்திரோபாயம்.

எது எவ்வாறாயினும் நாம் இங்கு கேட்ப தெல்லாம் தமிழ்த் தலைவர்களின் ஒற்றுமை பற்றிக் கூறுகின்ற சம்பந்தர் அவர்கள் கூட்டமைப்பில் தனித்து, தான் தீர்மானம் எடுத்தபோது; தமிழ்க் கட்சிகள் கூட்டமைப்பில் இருந்து வெளியேறியபோது; வடக்கின் முதல்வர் விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்தபோதெல்லாம் புரியாமல் போனது ஏன் என்பதுதான்?

ஆம், அப்போது கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் வாக்களித்தனர். இலங்கை தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்துக்கே தமிழ் மக்களின் வாக்கு என்ற நிலைமை இருந்தபோது எவரையும் தூக்கி எறிய முடிந்ததுடன் யார் கேள்வி கேட்டாலும் அதனை உதாசீனம் செய்யவும் துணிவிருந்தது.

ஆனால் நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கற்றுக் கொண்ட பாடம் இப்போது தமிழ்த் தலைவர்களின் ஒற்றுமை அவசியம் என்று சம்பந்தர் அவர்களைக் கூறவைக்கிறது.

ஐயா! தமிழ்ச் சனங்கள் ஒற்றுமையாக நின்று தங்கள் வாக்குகளை உங்களுக்கு வழங்கிய போது, நீங்கள் ஒற்றுமையின் பலத்தை உணர்ந் திருந்தால், சமகாலத்தில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய அவலம் ஏற்பட்டிருக்குமா? என்பதை நீங்களே சிந்தித்துப் பாருங்கள்.

-வலம்புரி-