Breaking News

செயலணிக்கான அழைப்பும் கூட்டமைப்பின் முடிவும்

வடக்கில் அபி­வி­ருத்தி அர­சியல் பர­ப­ரப்­பா­கி­யி­ருக்­கின்­றன.
பல்­வேறு அமைச்­சர்கள் பய­ணங்­களை மேற்­கொண்­டதன் மூலம், வடக்கில் அர­சியல் ரீதி­யான அரச நட­வ­டிக்­கைகள் சுறு­சு­றுப்­ப­டைந்­தி­ருக்கின்றன. அமைச்­சர்கள் மட்­டு­மல்­லாமல், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வும்­கூட, வடக்­கிற்கு விஜ­யங்­களை மேற்­கொண்டு பல்­வேறு நிகழ்­வு­களில் பங்­கெ­டுத்­தி­ருக்­கின்­றனர். பல்­வேறு கருத்­துக்­க­ளையும் வெளி­யிட்­டி­ருக்­கின்­றனர்.

இந்த நிகழ்­வு­களில் முக்­கிய அம்­ச­மாக மயி­லிட்டி துறை­முக புன­ர­மைப்­புக்­கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஜனா­தி­ப­தியின் பங்­கேற்­ற­லுடன் நடந்­தே­றி­யி­ருக்­கின்­றது.

வட­ப­குதி மக்கள் பல்­வேறு பிரச்­சி­னை­க­ளுக்கு முகம் கொடுத்­தி­ருக்­கின்­றார்கள். யுத்தம் முடி­வ­டைந்து 10 வரு­டங்களாகின்ற நிலை­யிலும் அவர்­களை அழுத்திக்கொண்­டி­ருக்­கின்ற பல பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண்­ப­தற்­கு­ரிய அறி­கு­றி­களைக் காண முடி­யாத நிலை­மையே நில­வு­கின்­றது.

அரச தலை­வர்கள், தமது பிரச்­சி­னை­களை உரிய முறையில் புரிந்துகொண்டு, அவற்­றுக்குத் தீர்வு காண­மாட்­டார்­களா என்று அந்த மக்கள் நாளும் பொழுதும் ஏங்கிக்கொண்­டி­ருக்­கின்­றார்கள். ஆட்சி மாற்­றத்தின் மூலம் அரச நிர்­வா­கத்தைக் கைப்­பற்­றி­யுள்ள ஜனா­தி­ப­தியும், பிர­த­மரும் புரிந்­து­ணர்­வு­டனும், சிறு­பான்மை இன மக்­களின் அர­சியல் நலன் சார்ந்தும், பரந்த மனப்­பான்­மை­யுடன் நடந்து கொள்­வார்கள் என்று எதிர்­பார்த்து, எதிர்­பார்த்து அவர்கள் ஏமாற்­ற­ம­டைந்­தி­ருக்­கின்­றார்கள்.

இத்­த­கைய ஒரு பின்­ன­ணி­யில்தான், பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண்­கின்ற தேச நலன் சார்ந்த உரிமைப் பகிர்வு அர­சியல் பின்­தள்­ளப்­பட்டு, இந்த அபி­வி­ருத்தி அர­சியல் சூடு பிடித்­தி­ருக்­கின்­றது. மயி­லிட்டி துறை­மு­கத்தின் புன­ர­மைப்­புக்­கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இதன் மைல்­கல்­லாகப் பதி­வா­கி­யி­ருக்­கின்­றது.

ஏறக்­கு­றைய 30 வரு­டங்­க­ளாக இரா­ணு­வத்தின் பிடியிலிருந்த மயி­லிட்டிதுறை­முகப் பிர­தேசம் மக்­க­ளிடம் கைமா­று­வதை இந்த நிகழ்வு குறிக்­கின்­றது. நாட்டின் அதி உயர் நிலையிலுள்ள அரச தலை­வ­ரா­கிய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இந்தத் துறை­மு­கத்தின் புன­ர­மைப்­புக்­கான அடிக்­கல்லை வைப­வ­ரீ­தி­யாக நாட்­டி­யுள்ளார்.

வட­மா­கா­ணத்தின் பொரு­ள­ாதார அபி­வி­ருத்­தி­யோடு, தேசிய பொரு­ளா­தார அபி­வி­ருத்­தி­யிலும் மயி­லிட்டி துறை­முகம் முக்­கிய வகி­பா­கத்தைக் கொண்­டி­ருக்­கின்­றது. இதனால், இந்த நிகழ்வு வட­மா­கா­ணத்தில் மட்­டு­மல்­லாமல், தேசிய அள­விலும் சரித்­திர முக்­கி­யத்­துவம் பெற்­றி­ருக்­கின்­றது.

அபி­வி­ருத்­தியும் உரி­மையும்

வடக்கு–கிழக்குப் பிர­தே­சங்­களின் துரித அபி­வி­ருத்­திக்­காக புதி­தாக அமைக்­கப்­பட்­டுள்ள ஜனா­தி­பதி செய­லணி குழு­வினால் அடை­யாளம் காணப்­பட்­டுள்ள அபி­வி­ருத்திப் பணி­களில் மயி­லிட்டி துறை­முக புனர்­நிர்­மாணப் பணியும் ஒன்று என ஜனா­தி­ப­தியின் ஊடகப் பிரிவு அறிக்­கை­யொன்றில் குறிப்­பிட்­டி­ருக்­கின்­றது.

துரித அபி­வி­ருத்­திக்­கான இந்தப் புதிய திட்­டத்தின் கீழ் வடக்­கிலும் கிழக்­கிலும் 50 ஆயிரம் வீடுகள் நிர்­மா­ணிக்­கப்­ப­ட­வுள்­ளன. இவற்றில் 25 ஆயிரம் வீடு­களை நிர்­மா­ணிக்கும் பணிகள் ஆகஸ்ட் மாதத்தில் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளன என்றும் 2019 ஆம் ஆண்டு ஜன­வரி மாத­ம­ளவில் 10 ஆயிரம் வீடுகள் கட்­டி­மு­டிக்­கப்­படும் என்று அந்த அறிக்கை கூறு­கின்­றது.

துரித அபி­வி­ருத்தித் திட்டம் என்­பது உட­ன­டி­யாகச் செய்­யப்­ப­டு­கின்ற வேலை­களைக் குறிக்­கின்ற போதிலும், ஆகஸ்ட் மாதத்தில் ஆரம்­பிக்­கப்­பட்­டி­ருக்க வேண்­டிய வீட்டுத்திட்ட வேலைகள் மாதம் முடியப் போகின்ற தரு­ணத்தை எட்­டிய நிலை­யிலும் இன்னும் ஆரம்­பிக்­கப்­ப­டவே இல்லை. இந்த வீடு­களை இந்­தி­யாவா, சீனாவா கட்டப் போகின்­றது என்ற விவாதம் அர­சியல் பட்­டி­மன்ற அரங்­கத்தில் சிக்­கி­யி­ருக்­கின்­றது.

யுத்தம் முடி­வ­டைந்­த­தை­ய­டுத்து, வடக்­கிலும் கிழக்­கிலும் மாவட்­டங்­க­ளையும் மாவட்ட நக­ரங்­க­ளையும் இணைக்­கின்ற பிர­தான இணைப்பு வீதிகள் கடந்த ஆட்­சிக்­கா­லத்தில் நிர்­மா­ணிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. இந்த வீதிகள் உள்ளூர் மக்­க­ளுக்கு பயன்­ப­டு­கின்­றன என்­ப­தை­விட, வடக்­கிலும் கிழக்­கிலும் கட்­ட­மைக்­கப்­பட்­டுள்ள இரா­ணுவ முகாம்­களில் பணி­யாற்­று­கின்ற நாட்டின் பல பிர­தே­சங்­க­ளையும் சேர்ந்த படை­யி­ன­ருக்கே பெரிதும் பயன்­ப­டு­கின்­றன. இந்த வீதிகள் நிர்­மா­ணிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து, குறிப்­பாக யாழ்ப்­பா­ணத்­திற்கும் நாட்டின் தென்­ப­கு­தியிலுள்ள மூலை முடுக்­கு­களில் உள்ள நக­ரங்­க­ளுக்கும் இரவு பக­லாக, தாரா­ள­மான பேருந்து சேவைகள் நடை­பெற்று வரு­கின்­றன என்­பது கவ­னத்­திற்­கு­ரி­யது.

பிர­தான வீதிகள் நிர்­மா­ணிக்­கப்­பட்­டி­ருக்­கின்ற அள­வுக்கு ஒப்­பீட்­ட­ளவில் உள்ளூர் வீதிகள் மீள்­கு­டி­யேற்றப் பிர­தேச மக்­க­ளுக்கு அதிகம் முக்­கி­ய­மா­னவை. இந்த வீதிகள் போதியளவில் திருத்­தப்­ப­ட­வில்லை.

இந்த நிலையில் துரித அபி­வி­ருத்தித் திட்­டத்தின் கீழ் 1847 கிலோ மீற்றர் நீள­மான வீதிகள் அபி­வி­ருத்தி செய்­யப்­ப­ட­வுள்­ளன என்றும், அம்­பா­றையின் சீனித்தொழிற்­சாலை, மட்­டக்­க­ளப்பு காகித உற்­பத்தித் தொழிற்­சாலை, அரிசி ஆலை போன்ற மக்­க­ளுக்­கான வாழ்­வா­தா­ரத்­துக்­கு­ரிய ஒருங்­கி­ணைக்­கப்­பட்ட வேலைத்­திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட வடக்கு– கிழக்குப் பிர­தே­சங்­களில் அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்கள் அவ­சியம் என்­பதில் மாற்று கருத்­துக்கு இட­மில்லை. ஆனால், அந்த அபி­வி­ருத்தித் திட்­டங்கள் பய­னா­ளி­களை உள்­ள­டக்­கிய, அந்தப் பிர­தேச நிர்­வாகக் கட்­ட­மைப்­புக்­களின் பங்­க­ளிப்­பையும் நிறை­வேற்று பொறுப்­பையும் உள்­ள­டக்­கி­ய­தாக அமைய வேண்­டி­யது அவ­சியம்.

ஏனெனில் அர­சியல் உரி­மை­களை வென்­றெ­டுப்­ப­தற்­கா­கவே ஆயுதப் போராட்டம் முன்­னெ­டுக்­கப்­பட்­டது. அதன் இலக்கு தனி­நா­டாக இருந்தபோதிலும், வர­லாற்று ரீதி­யான உரித்­து­ரி­மையைக் கொண்ட பிர­தே­சத்தில் நிர்­வாகச் செயற்­பா­டு­களைத் தாங்­களே முன்­னெ­டுக்க வேண்டும் என்ற அர­சியல் உரி­மைக்­கான கோரிக்­கை­யையே அது அடிப்­ப­டை­யாகக் கொண்­டி­ருந்­தது. ஆயுதப்போராட்டம் முடி­வுக்குக் கொண்டு வரப்­பட்­டு­விட்ட போதிலும், அந்த கோரிக்கை இன்னும் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. அதனை வென்­றெ­டுப்­ப­தற்­கு­ரிய உரிமைப் போராட்டம் இன்னும் உயிர்ப்­புடன் இருக்­கின்­றது.

காணி மீட்பு, காணாமல் போனோர் விவ­காரம், அர­சியல் கைதி­களின் விடு­தலை போன்ற பல்­வேறு வடி­வங்­களில், அந்தப் போராட்டம் வீதி­களில் அரங்­கே­றிய வண்ணம் இருக்­கின்­றன. மொழி­யு­ரிமை, மத உரிமை, வேலை வாய்ப்பு சட்டம் ஒழுங்கை நிலை­நாட்­டுதல் உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்­களில் இந்தப் போராட்­டங்கள் விரி­வ­டை­வ­தற்கும், போராட்ட வடி­வங்கள் மாற்­ற­ம­டை­வ­தற்­கு­மான சாத்­தி­யக்­கூ­று­களே தென்­ப­டு­கின்­றன.

அர­சியல் உரிமை சார்ந்த அபி­வி­ருத்­தியே அவ­சியம்

இந்த அரசு ஆட்­சிக்கு வந்து 3 ஆண்­டு­களின் பின்பே யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட வடக்கு–கிழக்குப் பிர­தே­சங்­களின் துரித அபி­வி­ருத்­திக்­கான ஜனா­தி­பதி செய­லணி குழு நிறு­வப்­பட்­டி­ருக்­கின்­றது. யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட வடக்­கையும் கிழக்­கையும் அபி­வி­ருத்தி செய்ய வேண்­டி­யது அவ­சியம். அது தவிர்க்­கப்­பட முடி­யா­தது. ஆட்­சிக்கு வந்த உட­னேயே இந்த அபி­வி­ருத்­திக்­கான நட­வ­டிக்­கை­களை அரசும் ஜனா­தி­ப­தியும் முன்­னெ­டுத்­தி­ருக்க வேண்டும். அது நடை­பெ­ற­வில்லை.

ஆட்சி மாற்றம் ஏற்­ப­டு­வ­தற்கும், தற்­போ­தைய ஜனா­தி­ப­தியும், பிர­த­மரும் அந்தப் பத­வியைப் பெறு­வ­தற்கு உறு­து­ணை­யாக தேர்­தல்­களில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்­க­ளா­கிய சிறு­பான்­மை­யி­னரே வாக்­க­ளித்­தி­ருந்­தனர். இறுக்­கமான இரா­ணுவ கட்­ட­மைப்­புக்­குள்ளே உயி­ரச்­சு­றுத்தல் உள்­ளிட்ட அச்­சு­றுத்­தல்­க­ளுக்கு மத்­தி­யி­லேயே அவர்கள் புதிய அர­சாங்கம் பதவி ஏற்­ப­தற்­காகத் தமது வாக்­கு­ரி­மையைப் பயன்படுத்­தி­யி­ருந்­தார்கள்.

குறிப்­பாக தமிழ் மக்­களின் அர­சியல் தலை­மை­யா­கிய தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு எதிர்க்­கட்சி அந்­தஸ்திலிருந்த போதிலும், அர­சாங்­கத்தின் பங்­காளிக் கட்­சியைப் போலவே, எல்லா விட­யங்­க­ளிலும் எல்லா இடங்­க­ளிலும் அர­சாங்­கத்­திற்கு ஆத­ர­வாகச் செயற்­பட்டு வரு­கின்­றது. அர­சாங்­கத்­திற்கு இடுக்கண் வந்­த­போ­தெல்லாம் அவற்றைக் களை­வ­தற்கு முன்­னின்று செயற்­பட்­டது. வரவு செலவுத் திட்­டத்தில் இருந்து பொறுப்புக்கூறும் விட­யத்தில் ஐ.நா. மன்­றத்தில் உரு­வா­கிய நெருக்­க­டி­களைத் தளர்த்தி, கால அவ­கா­சத்தைப் பெற்­றுக்­கொ­டுத்தல் வரையில் அனைத்து விட­யங்­க­ளிலும் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலைமை அர­சாங்­கத்­திற்குத் தோள்­கொ­டுத்து துணை நின்­றி­ருந்­தது.

எனவே, அந்த மக்­க­ளு­டைய அபி­வி­ருத்திப் பணிகள் தொடர்பில் அரசு பத­வி­யேற்ற உட­னேயே கவனம் செலுத்திச் செயற்­பட்­டி­ருக்க வேண்டும். அது அர­சாங்­கத்தின் கட்­டாய பொறுப்­பாகும். ஆனால் அந்தப் பொறுப்பை அரசு உரிய காலத்தில் நிறை­வேற்­று­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வில்லை.

மாறாக ஆட்­சிக்­காலம் முடி­வ­டை­வ­தற்கு இன்னும் 2 ஆண்­டு­களே உள்ள நிலையில் துரித அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­ப­தற்­காக ஒரு ஜனா­தி­பதி செய­லணி குழுவை நிய­மித்துச் செயற்­படத் தொடங்­கி­யி­ருப்­பது பல்­வேறு கேள்­வி­களை எழுப்­பி­யி­ருக்­கின்­றது.

அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கை­களில் கவனம் செலுத்­து­கின்ற அர­சாங்கம், முக்­கி­ய­மாக இரா­ணு­வத்தின் பிடியிலுள்ள காணி­களை விடு­வித்து, இடம்­பெ­யர்ந்த மக்­களின் மீள் குடி­யேற்ற நட­வ­டிக்­கை­களை முற்றுப் பெறச் செய்­வ­தற்குத் தயக்கம் காட்டி வரு­வ­தையே காண முடி­கின்­றது.

யாழ்ப்­பா­ணத்தில் உரை­யாற்­றிய ஜனா­தி­பதி, இன்னும் 12 வீத­மான காணி­களே இரா­ணு­வத்­திடம் உள்­ள­தா­கவும், ஏனைய காணிகள் விடு­விக்­கப்­பட்­டு­ விட்­டன என்றும் தெரி­வித்­தி­ருக்­கின்றார். அண்­மையில் வடக்­கிற்கு விஜயம் செய்­தி­ருந்த வெளி­வி­வ­கார அமைச்சர் திலக் மாரப்­பன இரா­ணுவம் உண்­மை­யி­லேயே எவ்­வ­ளவு காணி­களை விடு­வித்­தி­ருக்­கின்­றது, எத்­தனை குடும்­பங்கள் அவற்றில் மீள்­கு­டி­ய­மர்த்­தப்­பட்­டி­ருக்­கின்­றன என்ற விப­ரத்தை அர­சாங்க அதி­பர்கள் மற்றும் பிர­தேச செய­லாளர்­க­ளிடம் நேர­டி­யாகக் கேட்­ட­றிந்தார்.

அப்­போது தெரி­விக்­கப்­பட்ட தக­வல்­களில் பொது­மக்­க­ளு­டைய காணிகள் மிகக்­கு­றைந்த விகிதா­சா­ரத்­தி­லேயே விடு­விக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன என்ற உண்மை வெளி­யி­டப்­பட்­டது. அர­சுக்கும் அரச திணைக்­க­ளங்­க­ளுக்கும் சொந்­த­மான காணி­களே பெரு­ம­ளவில் விடு­விக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன என்­பதை அதி­கா­ரிகள் புள்­ளி­வி­ப­ரங்­க­ளுடன் எடுத்­து­ரைத்­தி­ருந்­தனர். பொது­மக்­க­ளுக்குச் சொந்­த­மான பெரு­ம­ள­வி­லான குடி­யி­ருப்பு காணி­களும் விவ­சாய காணி­களும் இன்னும் படை­யினர் வச­மி­ருக்­கின்­றன என்ற தக­வலும் வெளி­யி­டப்­பட்­டது.

காணிகள் விடு­விக்­கப்­பட வேண்­டி­யதும், தந்­தி­ரோ­பாய ரீதியில் தமிழர் பிர­­தே­சங்­களில் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற சிங்­களக் குடி­யேற்­றங்கள் நிறுத்­தப்­ப­டு­வதும், மக்­களின் மனங்­களை ஆழ­மாக அழுத்திக் கொண்­டி­ருக்­கின்ற காணாமல் ஆக்­கப்­பட்டோர் விவ­காரம், அர­சியல் கைதி­களின் விடு­தலை, மர­ணத்தின் விளிம்பு வரையில் சென்று மீண்­டுள்ள பாதிக்­கப்­பட்ட மக்­களின் நம்­பிக்­கையை வென்று அவர்­களின் மனங்­களை ஆற்­றுப்­ப­டுத்­த­லுக்­கான புற நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட வேண்­டி­யதும் அவ­சி­ய­மா­கின்­றன.

இந்த நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டாமல், சந்­தே­கத்தின் பிடியில் சிக்­கி­யுள்ள மக்கள் மத்­தியில் அவர்­க­ளு­டைய அதி­காரப் பங்­க­ளிப்பு இல்­லாமல், மேலி­ருந்து திணிக்­கின்ற அபி­வி­ருத்திச் செயற்­பா­டுகள் உண்­மை­யான அபி­வி­ருத்­தி­யாக இருக்க முடி­யாது. அது நிலைத்து நிற்­கத்­தக்க அபி­வி­ருத்­தி­யா­கவும் அமை­யாது.

ஜனா­தி­பதி செய­லணி குழுவும் தமிழர் தரப்பும்

இனங்­க­ளுக்­கி­டையில் ஐக்­கி­யத்தை ஏற்­ப­டுத்­து­வதும், நல்­லி­ணக்­கத்தை உரு­வாக்­கு­வதும் அர­சாங்­கத்தின் முக்­கிய நோக்­க­மாக உள்­ளது. துரித அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்­களை வடக்­கிலும் கிழக்­கிலும் முன்­னெ­டுப்­பதன் மூலம் இந்த இலக்கை எட்­டி­விட முடியும் என்று ஜனா­தி­பதி கொண்­டி­ருக்­கின்ற எண்ணம் தவ­றா­னது என்று வட­மா­காண முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் ஜனா­தி­ப­திக்கு எழு­தி­யுள்ள கடிதம் ஒன்றில் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.

ஐக்­கி­யமும், நல்­லி­ணக்­கமும் அர­சியல் தீர்வின் மூல­மா­கவே எட்­டப்­பட முடியும் என்­பதை விக்கி­னேஸ்­வரன் ஜனா­தி­ப­தி­யிடம் இந்தக் கடி­தத்தின் ஊடாக வலி­யு­றுத்­தி­யுள்ளார். வட­கி­ழக்கு துரித அபி­வி­ருத்­திக்­கான ஜனா­தி­பதி செய­லணி குழுவில், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் எவ­ரையும் உறுப்­பி­னர்­க­ளாக இணைக்­காமல், வட­மா­காண முத­ல­மைச்சர் என்ற ரீதியில் தன்னை மாத்­திரம் ஒரு­வ­ராக நிய­மித்­தி­ருப்­பது தொடர்பில் ஜனா­தி­ப­திக்கு எழு­திய கடி­தத்­தி­லேயே அவர் இதனை குறிப்­பிட்­டி­ருந்தார்.

இந்த செய­லணி குழு­விற்கு ஜனா­தி­ப­தியே தலைவர். பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுடன், அமைச்­ச­ரவை அந்­தஸ்து பெற்­றுள்ள 15 அமைச்­சர்கள், வடக்கு–கிழக்கு மாகா­ணங்­களின் ஆளு­னர்கள், முத­ல­மைச்­சர்கள் ஆகி­யோ­ருடன் முப்­ப­டை­களின் தள­ப­தி­களும் இதில் இடம்­பெற்­றி­ருக்­கின்­றார்கள். இந்த செய­ல­ணியின் செய­லா­ள­ராக தமிழர் ஒருவர் நிய­மிக்­கப்­பட்­டி­ருக்­கின்றார்.

ஒரு பிர­தே­சத்தை துரி­த­மாக அபி­வி­ருத்தி செய்­வ­தற்கு அர­சாங்கம் நட­வ­டிக்­கை­களை எடுக்­கும்­போது, அந்தப் பிர­தே­சத்தைச் சேர்ந்த மக்­களால் தெரிவு செய்­யப்­பட்ட பாராளு­மன்ற பிர­தி­நி­தி­க­ளுக்கு இட­ம­ளிக்­காமல் இருப்­பது கேள்­விக்­கு­ரி­யது. இனங்­க­ளுக்­கி­டையில் ஐக்­கி­யத்­தையும் நல்­லி­ணக்­கத்­தையும் ஏற்­ப­டுத்த வேண்­டி­யதோர் அர­சியல் சூழல் நில­வு­கின்ற நிலையில் மக்கள் பிர­தி­நி­தி­களின் பங்­க­ளிப்பு இல்­லாமல் அபி­வி­ருத்திச் செயற்­பா­டு­களை துரி­த­மாக முன்­னெ­டுக்க முயற்­சித்­தி­ருப்­பது சிந்­த­னைக்­கு­ரி­யது.

வடக்கும் கிழக்கும் இரா­ணுவ மயப்­ப­டுத்­தப்­பட்ட நிலையிலுள்ள போது, அங்கு மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற சிவில் செயற்­பா­டு­க­ளான அபி­வி­ருத்திச் செயற்­பா­டுகள் தொடர்பில் முடி­வெ­டுக்­கின்ற அல்­லது அவற்றை முன்­னெ­டுப்­பது தொடர்­பிலான நட­வ­டிக்­கை­க­ளுக்குப் பொறுப்­பான குழுவில் முப்­ப­டை­களின் தள­ப­திகள் இடம்­பெற்­றி­ருப்­பது பல்­வேறு சந்­தே­கங்­க­ளையே ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது.

வடக்­கிலும் கிழக்­கிலும் தேசிய பாது­காப்­புக்­கா­கவே இரா­ணுவம் நிலை­நி­றுத்­தப்­பட்­டி­ருப்­ப­தாகக் கூறப்­பட்­டாலும், சிவில் நிர்­வாகச் செயற்­பா­டுகள், அபி­வி­ருத்திச் செயற்­பா­டுகள், பொரு­ளா­தார முயற்­சிகள் என பொது­மக்­களின் வாழ்­வியல் சார்ந்த விட­யங்­களில் படை­யினர் நேர­டி­யாக சம்­பந்­தப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். இதனால், இரா­ணுவம் அங்­கி­ருந்து விலக்­கிக்­கொள்­ளப்­பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்­ட­கா­ல­மாக நிறை­வேற்­றப்­ப­டா­துள்ள நிலையில், துரித அபி­வி­ருத்திச் செயற்­பா­டு­களில் முப்­ப­டை­களின் தள­ப­திகள் உள்­வாங்­கப்­பட்­டி­ருப்­பது எந்த வகை­யிலும் பொருத்­த­மா­ன­தாகத் தெரி­ய­வில்லை.

செய­ல­ணியின் காலச்சூழல்

ஜனா­தி­பதி செய­ல­ணியில் வடக்கு, கிழக்குப் பிர­தேச மக்­களால் தெரிவு செய்­யப்­பட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் எவரும் உள்­ள­டக்­கப்­ப­ட­வில்லை. ஆனால், பத­விக்­காலம் முடி­வ­டை­கின்ற தறு­வாயில் உள்ள வட­மா­காண முத­ல­மைச்சர் அதன் உறுப்­பி­ன­ராக நிய­மிக்­கப்­பட்­டி­ருக்­கின்றார். அவ­ரு­டைய பதவி முடி­வ­டை­வ­தற்கு இன்னும் நாட்கணக்­கி­லான சிறிய கால அவ­கா­சமே உள்­ளது. மாகாண சபை கலைக்­கப்­பட்­டதும், முத­ல­மைச்சர் என்ற ரீதியில் அவர் அந்த செய­ல­ணியில் தொடர்ந்து உறுப்­பி­ன­ராக இருக்க முடி­யாது என்­பது அனு­மானம். அவ்­வாறு இருந்­தா­லும்­கூட, அவர் எத்­த­கைய அதி­காரம் கொண்­ட­வ­ராக அல்­லது செய­ல­ணியில் எடுக்­கப்­ப­டு­கின்ற முடி­வு­களில் செல்­வாக்கு செலுத்தக்கூடி­ய­வ­ராக இருப்பார் என்று கூற முடி­யாது.

மக்கள் பிர­தி­நி­தி­க­ளான பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அந்தக் குழுவின் அங்­கத்­த­வர்­க­ளாக இல்­லாத நிலையில் அந்தக் குழுவில் பெரும்­பான்­மை­யாக உள்ள வடக்­கிலும், கிழக்­கிலும் தொடர்­பில்­லாத கட்சி அர­சியல் நலன்­சார்ந்­த­வர்­களும், அரச நலன்­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் கொடுப்­ப­வர்­க­ளுமே காணப்­ப­டு­கின்­றார்கள். இந்த நிலையில் அந்தக் குழுவின் செயற்­பா­டுகள் நீண்­ட­கால தேவை­க­ளையும் யானை பசியைப் போன்ற பல தேவை­க­ளையும் கொண்ட மக்­களின் அபி­லா­ஷைகள் நிறை­வேற்­றப்­படும் என்று கூறு­வ­தற்­கில்லை.

ஏனெனில் கடந்த 3 வருட காலத்­திலும் அரசாங்கமும் சரி, ஜனாதிபதி மற்றும் பிரதமரும் சரி அரசாங்கத்தின் சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் எதுவும் அவர்களால் நிறைவேற்றப்படவில்லை. அவர்களுடைய செயற்பாடுகள் பெரும்பான்மை இன மக்களின் நலன்கள் சார்ந்ததாகவும், கட்சி அரசியல் நலன்கள் சார்ந்ததாகவுமே அமைந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த ஜனாதிபதி செயலணி குழுவினால் எதனைச் சாதிக்க முடியும் என்று தெரியவில்லை.

இந்த நிலையில்தான் மயிலிட்டி துறைமுக வைபவத்தில் உரையாற்றிய ஜனாதிபதி 27 ஆம் திகதி நடைபெறவுள்ள துரித அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி க்குழு கூட்டத்தில் வடக்கு–கிழக்கு பிரதேசங்களைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களைக் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பு ஏற்கனவே ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய அந்தப் பிரதிநிதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுவிட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியின் அழைப்பு, செயலணியில் அங்கத்துவம் பெறுவதற்கான அழைப்பல்ல. அந்த குழுவின் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக மட்டுமே அவர்கள் அழைக்கப்பட்டிருக்கின்றார்கள். இதனால்தான் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளக்கூடாது என்று வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கோரியிருக்கின்றார். ஆனால் அந்தக் கோரிக்கையை கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் நிராகரித்துள்ளார்.

சமஷ்டி ஆட்சி முறையையும் வடகிழக்கு தாயகப் பிரதேசம் என்ற ரீதியில் பகிரப்பட்ட இறையாண்மையையும் வலியுறுத்தி அதன் அடிப்படையில் ஓர் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கோரி வருகின்றது. இந்த நிலையில் மாகாண சபையையும், மக்கள் பிரதிநிதிகளையும் புறந்தள்ளி, அரசியல் தீர்வுக்கான அதிகாரப் பகிர்வு, அரசியல் உரிமை என்பனவற்றில் நாட்டம் காட்டாத துரித அபிவிருத்திக் குழுவின் செயற்பாடுகளிலும், மக்களின் பங்களிப்பு புறக்கணிக்கப்பட்ட துரித அபிவிருத்தித் திட்டங்களிலும் என்ன நன்மைகளை கூட்டமைப்பு அடையப் போகின்றது என்பது தெரியவில்லை.

பி. மாணிக்­க­வா­சகம்