Breaking News

ஆறாவதாக இருந்த சுமந்திரன் எப்படி மூன்றுக்கு வந்தார்-மக்கள் எதிர்ப்பு(காணொளி)

கடைசி நேரம்வரை 6ஆவது நிலையிலிருந்த சுமந்திரன் எப்படி 3ஆவது நிலைக்கு கொண்டுவரப்பட்டார் எனக் கேள்வி எழுப்பி யாழில் மக்கள் போராட்டம் .

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியிடுவதில் திருகோணமலையிலும் யாழ்ப்பாணத்திலும் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த வாக்கெண்ணும் நிலையத்திலேயே கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் போட்டியிட்ட தேர்தல் தொகுதியின் வாக்குகள் எண்ணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை யாழ்ப்பாணம் மத்தியகல்லூரியின் வாக்கெண்ணும் நிலையத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் ஒன்றாகிய புளொட் கட்சியின் ஆதவாளர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளமையால் பதற்ற நிலை ஏற்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக வெளியாகியிருந்த தகவல்கள் அடிப்படையில் சிவஞானம் சிறீதரன், சசிகலா ரவிராஜ் ஆகியோருடன் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவு செய்யப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் சசிகலா ரவிராஜை தன்னுடைய உறுப்புரிமையை சுமந்திரனுக்கு விட்டுத்தருமாறு பல சுற்றுப் பேச்சுக்கள் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இருந்தபோதிலும் சசிகலா அதற்கு உடன்பட மறுத்தாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் திடீரென சித்தார்த்தன் தெரிவில் இடம்பெற்றிருக்கவில்லை என்றும் அவருக்கு பதிலாக சுமந்திரனின் பெயரே இடம்பெற்றதாகவும் அங்கிருந்தவர்களுக்கு தகவல் வழங்கப்பட்டிருந்ததாகவும் இதனை அடுத்து மீள வாக்கினை எண்ணுமாறு புளொட் ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கியிருப்பதாகவும் அதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுவதாகவும் தெரியவருகிறது.

திருமலை மற்றும் யாழ்.மாவட்ட விருப்பு வாக்கு விபரங்கள் இன்னமும் உத்தியோகபூர்வமாக வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


நன்றி-அருவி