Breaking News

'தல' தோனியை தொடர்ந்து 'சின்ன தல' ரெய்னாவும் ஓய்வு அறிவிப்பு!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அதிரடியாக அறிவித்தார். 

அவரது ஓய்வு அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திலேயே இந்திய அணியின் மற்றொரு முன்னணி வீரரான சுரேஷ் ரெய்னாவும் தமது ஓய்வை அறிவித்துள்ளார். 

இதுதொடர்பாக தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரெய்னா வெளியிட்டுள்ள பதிவில், " தோனியை போன்று தானும் ஓய்வை அறிவிக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார். அத்துடன், " உங்களுடன் விளையாடியதைவிட சிறந்த தருணம் வேறெதுவும் இல்லை"என்று தோனியின் பெயரை குறிப்பிட்டு ரெய்னா பதிவிட்டுள்ளார். 

தோனி மற்றும் சுரேஷ் ரெய்னாவின் ஓய்வு அறிவிப்பு சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. 

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியில் இடம்பெற்றுள்ள தோனியை ரசிகர்கள் தல எனவும், சுரேஷ் ரெய்னாவை சின்ன தல என்று அன்புடன் அழைத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.