Breaking News

யாழ். பண்ணை பகுதியில் இன்றும் பெண்ணின் எலும்புகள் மீட்பு!


யாழ்.பண்ணை மீனாட்சிபுரம் பகுதியில் மீட்கப்பட்ட பெண்ணின் எச்சங்கள் தொடர்பான அகழ்வுகள் தற்போது நடைபெற்று வருகின்ற நிலையில் அகழ்வின் போது, பெண்ணின் கால் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கடந்த வெள்ளிக்கிழமை இந்தப் பகுதியில் உள்ள கடல் உணவு ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தின் வளாகத்தில் கொட்டகை அமைப்பதற்கான குழி தோண்டும் போது, பெண் ஒருவரின் உடற்பாகங்கள் மற்றும் ஆடைகள் உள்ளிட்ட மனித எச்சங்கள் வெளிவந்தததை தொடர்ந்து, அந்த நிறுவனத்தினரால் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

அந்த தகவலின் பிரகாரம், யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவுடன் அன்றைய தினம் பதில் நீதிவான் வி.ரி.சிவலிங்கம் மனித எச்சங்களை பார்வையிட்டதுடன் நீதிவானின் அனுமதியுடன் இன்றையதினம் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன. 

அகழ்வில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிபதி, யாழ்.போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி, யாழ்ப்பாணம் தடயவியல் பொலிஸார் மற்றும் யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் உள்ளிட்டவர்கள் அகழ்வு பணி நடவடிக்கைகளை பரிசோதனை செய்து வருகின்றார்கள். 

இந்நிலையில், அகழ்வு பணி இடத்தில் ஊடகவியலாளர்களை அனுமதிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன், இனி அகழ்வு வேலைகளை முன்னெடுக்க வேண்டாம் என்றும் பணிக்கப்பட்டுள்ளதுடன், மீட்கப்பட்ட எச்சங்கள் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.