Breaking News

உயர்தர பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கான அறிவித்தல்!

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடத்தப்படும் க.பொ.த உயர் தர பரீட்சையில் தோற்றும் மாணவர்கள் நூறு சதவீதம் சுகாதார வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 

இன்றைய (12) தினம் இடம்பெறவுள்ள க.பொ.த உயர் தர பரீட்சை தொடர்பில் மாணவர்களை தெளிவுப்படுத்தும் வகையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்குறித்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

பரீட்சை நடைபெறும் மண்டப வளாகத்திற்கு வந்த பின்னர் குழுக்களாக கூடி பாட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவது உள்ளிட்ட விடயங்களில் ஈடுபட வேண்டாம் என அவர் மாணவர்களை கேட்டுள்ளார். 

நேற்றைய தினம் (11) முடிவடைந்த 5 ஆம் ஆண்டு புலமைப்பரீசில் பரீட்சையில் தோற்றிய மாணவர்கள் முறையான சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றாமை தொடர்பில் தெரியவந்துள்ளதாகவும் ஆகவே இந்த விடயத்தில் பெற்றோர் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

பரீட்சை முடிவடைந்தவுடன் வீடுகளுக்கு செல்ல வேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார். ஊடரங்கு அனுமதி பத்திரங்களை பரீட்சை அனுமதி பத்திரங்களாக பாவிக்க முடியும் எனவும் தேவையேற்படின் காண்பிக்க அதன் நகலை கைவசம் வைத்திருக்குமாறும் அவர் மாணவர்களை கேட்டுள்ளார்.