நாட்டில் கொரோனா தொடர்பில் தற்போதைய நிலவரம்..! முழுமையான தகவல்!
நாட்டில் நேற்றைய தினம் 275 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.
தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்த 43 பேருக்கும், நோயாளர்களுடன் தொடர்பில் இருந்த 232 பேருக்கும் இவ்வாறு தொற்றுறுதியாகியுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 335 ஆக அதிகரித்துள்ளது.
அதேநேரம் 6 ஆயிரத்து 65 கொவிட் 19 நோயாளர்கள் நாட்டில் உள்ள பல வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எனினும் நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளது.
நேற்றைய தினம் மேலும் 344 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய தொற்றிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 249 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனாவால் மரணித்தார் என நேற்று அறிவிக்கப்பட்ட 22வது நபர் தற்கொலை செய்து கொண்டவர் என்பதால், அவர் கொவிட்-19 காரணமாக மரணித்தார் என கருத முடியாது.
எனவே இந்த மரணத்தை கொவிட்19 மரணமாக கருதாமல் இருக்க, தொற்று நோய் தடுப்பு பிரிவால் தீரமானித்துள்ளதென அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தொற்றுநோய் விஞ்ஞானபிரிவின் விஷேட மருத்துவ நிபுணர் சுதத் சமரவீரவை மேற்கோள்காட்டி அரசாங்க தகவல் திணைக்களம் தமது அறிக்கையில் இந்த விடயத்தை வெளியிட்டுள்ளது.
தற்கொலை செய்து கொண்ட நிலையில் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 27 வயதான இளைஞர் கடந்த 31ஆம் திகதி உயிரிழந்தார்.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் போது அவருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியிருந்தது.
இதன்பின்னர், கொவிட்-19 காரணமாக இலங்கையில் 22வது மரணம் சம்பவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று மதியம் அறிவித்திருந்தது.
எனினும் அவரது மரணம் தற்கொலை என்பதால், கொவிட்19 நோயால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 21 என்றே கருதப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அம்பாறை பகுதியில் மினுவாங்கொட ஆடை தொழிற்சாலை பேலியகொடை மீன்சந்தையுடன் தொடர்புடைய 19 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஜீ. சுகுணன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கல்முனை பிராந்தியத்தில் இதுவரை 17 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உரிய சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவதன் ஊடாக கொவிட் 19 தொற்றை தவிர்க்க முடியும் என வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வட மாகாணத்தில் கடல் மார்க்கமாக அத்துமீறி நுழைபவர்கள் தொடர்பில் பொது மக்கள் தகவல் வழங்க வேண்டும் என மாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் கோரியுள்ளார்.
இதேவேளை, கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு சேவை திணைக்களத்தின் 4 பணியாளர்களுக்கு கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி ருவண் விஜயமுனி இதனைத் தெரிவித்துள்ளார்.
அந்த திணைக்களத்தின் 65 பணியாளர்களுக்கு அண்மையில் பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் அவர்களில் 4 பேருக்கு இவ்வாறு தொற்றுறுதியாகியுள்ளது.
கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் பணியாற்றும் துணை ஊழியர் ஒருவருக்கு கொவிட் 19 தொற்றுதியாகியுள்ளது.
அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கோவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளதாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.








