Breaking News

ஒரேஞ் பழத்தை எந்த நேரத்தில் சாப்பிடுவது நல்லது?

 


ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு தன்மையை அதிகப்படுத்தக்கூடியது என்பதால் குளிர் காலத்தில் சாப்பிடுவது தவறில்லை. உடலுக்கு போதுமான எதிர்ப்பு ஆற்றலை வழங்கும். ஆனால் சளி, இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்ட பிறகு ஆரஞ்சு பழத்தை சாப்பிடக்கூடாது. அது இருமலை அதிகப்படுத்திவிடக்கூடும். அதாவது சளி, இருமல் வராமல் தடுப்பதற்காக சாப்பிடலாம்.

ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியது என்பதால் அதனை சாப்பிடுவது நல்லது. எனினும் மழை, குளிர்காலத்தில் ஆரஞ்சு பழத்தை சாப்பிடுவதற்கு நிறைய பேர் தயங்குவதுண்டு. சளி, இருமல் பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்ற எண்ணமே அதற்கு காரணம். அதற்காக அறவே ஆரஞ்சு பழத்தை தவிர்க்க வேண்டியதில்லை. குளிர்காலத்தில் முழு உடல் அமைப்புக்கும் புத்துணர்ச்சி அளிக்கும் ஆற்றல் ஆரஞ்சு பழத்திற்கு உண்டு. மலச்சிக்கல், மந்தமான சருமம், வறண்ட கூந்தல் போன்ற குளிர்காலம் தொடர்பான பல பிரச்சினைகளை தீர்க்கவும் வல்லது.

ஆரஞ்சுப் பழத்தில் உள்ள பைட்டோ கெமிக்கல்கள், புற்றுநோய், ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகளில் இருந்து பாதுகாக்க உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இரைப்பை, குடலை சுத்தம் செய்து செரிமானத்தை அதிகரிக்க செய்யவும், கொழுப்பைக் குறைக்கவும் உதவும். ஆரஞ்சு இதய ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். இதயத்திற்கு சிறந்த டானிக்காகவும் கருதப்படுகிறது. அஜீரணம், வயிற்று வலி, வயிற்று புழு தொல்லையை போக்க உதவும். ஆரஞ்சு பழத்தில் இரும்பு சத்து அதிக அளவு இல்லாவிட்டாலும் கூட உடலில் இரும்பு சத்து உறிஞ்சுதலை மேம்படுத்தும். இரும்பு சத்து நிறைந்த உணவுகளுடன் சேர்த்து உட்கொள்ளலாம். ஆரஞ்சு பழங்கள் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருப்பதோடு, ரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்தக்கூடியது.

உடலில் கொலஸ்ட்ரால் அளவை குறைத்து கண்களுக்கு நலம் சேர்க்கக்கூடியது. இயற்கை வழங்கும் புளிப்பு பழங்களில் ஆரஞ்சு சிறந்ததாக கருதப்படுகிறது, குறிப்பாக குளிர்காலத்தில் உட்கொள்வது ஆரோக்கியத்திற்கும் நல்லது. ஒரு ஆரஞ்சு பழத்தில் சுமார் 100 மி.கி வைட்டமின் சி உள்ளது. இது தினசரி தேவையான அளவுக்கு போதுமானது.

ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களை அதிகமாக உட்கொள்வது, அமில வீக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இதனால் தொண்டையில் எரிச்சலை அதிகப்படுத்தும். இருமலையும் உண்டாக்கும். ஆரஞ்சு பழம் சளியை உற்பத்தி செய்யும் என்று சீனர்கள் நம்புகிறார்கள். இருமல் அல்லது ஜலதோஷத்தை தடுக்க வைட்டமின் சி உதவாது என்று ஆய்வு முடிவுகளும் கூறுகின்றன. எனவே இருமல் உள்ளவர்களுக்கு, சிட்ரஸ் வகை பழங்களை கொடுக்கக்கூடாது.

ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களை உணவு உட்கொண்ட பின்பு உடனே சாப்பிடக்கூடாது. அது வயிற்றில் அமிலம் உருவாகுவதை அதிகரித்துவிடும். செரிமான பிரச்சினைகளை ஏற்படுத்தும். மேலும் ஊட்டச்சத்து உறிஞ்சுதலைக் குறைக்கும். உணவு சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக சாப்பிடலாம்.