Breaking News

டுவிட்டரில் மூழ்கப்போகிறேன்.. தலைமையகத்திற்கு கைக்கழுவும் தொட்டியுடன் சென்ற எலோன் மஸ்க்!



உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவதாக அறிவித்து ரூ.3½ லட்சம் கோடிக்கு ஒப்பந்தம் செய்தார். ஆனால் திடீரென்று ஒப்பந்தத்தை ரத்து செய்ய உள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்தார்.

 டுவிட்டரில் உள்ள போலி கணக்குகள் குறித்த விவரங்களை தராததால் ஒப்பந்தத்தை ஏற்க முடியாது என்றார். இதையடுத்து எலான் மஸ்க் மீது டுவிட்டர் நிறுவனம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த கோர்ட்டு நாளைக்குள் ஒப்பந்தத்தை இறுதி செய்ய கெடு விதித்தது.

 இந்த நிலையில் எலான் மஸ்க் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்துக்கு சென்றார். அப்போது அவர், கைக்கழுவ பயன்படுத்தப்படும் தொட்டி (சிங்க்) ஒற்றை கையில் தூக்கிக்கொண்டு உள்ளே சென்றார். அதுதொடர்பான வீடியோவை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 

மேலும் தனது டுவிட்டர் பக்கத்தில், தான் டுவிட்டரின் தலைமை அதிகாரி என்று பெயர் அருகே குறிப்பிட்டுள்ளார். இதைத்தவிர, "டுவிட்டர் தலைமையகத்தில் நுழைகிறது - அது மூழ்கட்டும்!" என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், அந்த வீடியோவில் எலோன் மஸ்க் சிங்க் சுமந்துக் கொண்டு உள்ளே செல்வது, அதில் (டுவிட்டரில்) அவர் மூழ்கப்போகிறார் என்பதை தெரிவிக்கிறது. 

இதன்மூலம் டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை எலான் மஸ்க் ஏற்றுக் கொண்டுவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த ஒப்பந்தத்தை நாளைக்குள் முடித்துக் கொள்ளபோவதாக எலான் மஸ்க் தனது பங்குதாரரிடம் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.