1100 ஆண்டுகள் பழமையான ஹீப்ரு பைபிள் ரூ.313 கோடிக்கு ஏலம்!
1100 ஆண்டுகள் பழமையான ஹீப்ரு மொழியில் எழுதப்பட்ட பைபிள், 9-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து 10-ம் நூற்றாண்டின் முற்பகுதி வரையிலான காலகட்டத்தில் எழுதப்பட்டது. இது உலகின் மிக பழமையான பைபிள் கையெழுத்து பிரதிகளில் ஒன்றாகும்.
இந்த பைபிளை ருமேனியாவிற்கான அமெரிக்க முன்னாள் தூதர் ஆல்பிரட் மோசஸ், வாங்கி இருந்தார். இந்த ஹீப்ரு மொழி பைபிள், அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஏல நிறுவனத்தில் ஏலம் விடப்பட்டது. இதில் 2 நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவியது.
4 நிமிட ஏலத்துக்கு பிறகு ஹீப்ரு பைபிளை சோதே பிஸ் நிறுவனம் 38.1 மில்லியன் அமெரிக்க டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ.313 கோடி) ஏலத்தில் எடுத்தது. இந்த பைபிள், இஸ்ரேலின் டெல் அவிவில் உள்ள யூத மக்களின் அருங்காட்சியகத்துக்கு பரிசாக வழங்கப்படும் என்று சோதேபிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்க முன்னாள் தூதர் மோசஸ் கூறும்போது, 'ஹீப்ரு பைபிள் வரலாற்றில் மிகவும் செல்வாக்குமிக்கது. மேற்கத்திய நாகரீகத்தின் அடித்தளமாக உள்ளது. இது யூத மக்களுக்கு சொந்தமானது என்பதை அறிந்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்' என்றார்.
1994-ம் ஆண்டு லியொனார்டோ டாவின்சியின் கோடெக்ஸ் லீசெஸ்டர் கையெழுத்து பிரதி 30.8 மில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்கப்பட்டது. அதை ஹீப்ரு பைபிள் முறியடித்தது. இதன்மூலம் ஏலத்தில் விற்கப்பட்ட மிக மதிப்பு மிக்க கையெழுத்து பிரதி என்ற சாதனையை படைத்தது.