இடுப்பு வலியை குணமாக்க சில வழிமுறைகள்!
இடுப்பு வலிக்கு முதல் காரணம் உடற்பயிற்சி செய்யாமல் இருத்தலும், தவறான உணவுமுறையும் தான். பொதுவாக, இருசக்கர வாகனத்தை அதிக நேரம் ஓட்டினால் இடுப்பு வலி வரும் என நம்பப்படுகிறது. மேலும், அதிக நேரம் உட்கார்ந்தே வேலை செய்வதாலும் இடுப்பு வலி மற்றும் முதுகு வலி ஏற்படுகிறது என கூறப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை மற்றும் இதறாகானத் தீர்வுகளை இப்போது காண்போம்.
இடுப்பு வலி (Hip Pain)
மனிதர்களுக்கு பொதுவாக இடுப்பு வலி ஏற்படுவதற்கு உடல் உழைப்பு, மருந்துகளினால் உண்டாகும் பக்க விளைவுகள் மற்றும் விபத்துகள் காரணமாக இருக்கலாம். அதே சமயம், ஒருவரின் வயது அதிகரிக்கும் போது தசை, தசை நார்கள் மற்றும் நரம்புகள் ஆகியவற்றின் செயல்திறன் பாதிப்படைகிறது. இதன் காரணமாக இடுப்புவலி இன்னமும் அதிகமாகிறது.
சிலர் உட்கார்ந்து எழுந்திருக்கும் போது இடுப்பை பிடித்துக் கொண்டே எழுவார்கள். இதற்கு காரணம் இடுப்பில் அந்த அளவுக்கு வலி இருக்கும். ஆனால், இதைப் பலரும் மிகச் சாதாரணமாக கடந்து விடுவார்கள். உண்மை என்னவென்றால், இப்படி அதிக நேரம் உட்கார்ந்திருக்கும் போதோ அல்லது நிற்கும் போதோ இடுப்பு வலி ஏற்படுவது இயல்பான ஒன்றல்ல. இது ஒரு தீவிர பிரச்சனையின் அறிகுறியாக கூட இருக்கலாம். தொடர்ச்சியாக வேலை செய்து கொண்டிருப்பது அல்லது ஒரே இடத்தில் உட்கார்ந்து இருப்பது அல்லது மோசமான தோரணை போன்றவை இடுப்பு வலியை அதிகரிக்கிறது.
இடுப்பு வலிக்கான தீர்வுகள்
இடுப்பு வலியால் பாதிக்கப்பட்ட நபர்கள், ஐஸ் பேக் வைத்து ஒத்தடம் கொடுத்து வந்தால், இடுப்பு வலிக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.
அடுத்ததாக, தினந்தோறும் குறிப்பிட்ட சில மணி நேரத்தை உடற்பயிற்சி செய்வதற்காக ஒதுக்கி, கட்டாயமாக உடற்பயிற்சி செய்ய வேண்டும். மேலும், தியானங்களில் ஈடுபடுவதும் இடுப்பு வலியை குணமாக்குவதற்கு சிறந்த தீர்வாக அமையும்.
அதே சமயம், நமது உணவுப் பழக்கமும் இடுப்பு வலியைத் தூண்டுதற்கான மிக முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
ஆகவே நல்ல ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது, இயற்கையான எண்ணெய்களை பயன்படுத்துவது போன்றவையும் நல்ல தீர்வாக அமைவது மட்டுமின்றி, தூக்கமின்மை பிரச்சனைகளும் சரியாகி விடும்.