தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்திற்கு எதிராகத் தொடரும் தடை!
இலங்கை தமிழரசுக் கட்சியின் 17 ஆவது தேசிய மாநாட்டை நடத்த தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஏப்ரல் மாதம் 05 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு கடந்த 19 ஆம் திகதி நடைபெறும் என்று கூறப்பட்டிருந்தநிலையில், அதற்குத் தடை விதிக்கக்கோரி யாழ்ப்பாணத்திலும், திருகோணமலையிலும் இருவேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகத் தெரிவில் கட்சிக்குள் ஏற்பட்ட முரண்பாடுகளின் தொடர்ச்சியாகவே இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இதேவேளை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு எதிரான வழக்கை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25ஆம் திகதிக்கு யாழ்பாணம் மாவட்ட நீதிமன்றால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி என்.சிறிக்காந்தா தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் மாநாட்டுக்கு எதிராக நீதிமன்றால் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவு தொடர்பான வழக்கு இன்றையதினம் யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.