Breaking News

செம்மணியில் சிறுமியின் ஆடை அகழ்ந்தெடுப்பு (படங்கள் இணைப்பு)

யாழ்ப்பாணம் செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மீண்டும் மனிதப் புதைகுழிகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட புதிய பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) ஒரு சிறுமியின் ஆடை முழுமையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில், நேற்று அந்த ஆடையின்



சில பகுதிகள் மட்டுமே கண்டறியப்பட்டிருந்தன.

முன்னதாக, மயானத்தில் ஒரு மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அதற்கு அருகிலும் மேலும் புதைகுழிகள் இருக்கலாம் என செய்மதி (geophysical) ஆய்வுகள் மற்றும் டிரோன் புகைப்படங்களின் அடிப்படையில் சில பகுதிகள் சந்தேகத்துக்குரியவையாக அடையாளம் காணப்பட்டன. இவை குறித்து தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவன் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்திருந்தார்.

நீதிமன்ற உத்தரவின் பேரில், அகழ்வுப் பணிகள் ஜூலை 2ஆம் தேதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொல்லியல் துறை மாணவர்கள் மற்றும் நல்லூர் பிரதேச சபை ஊழியர்களின் ஒத்துழைப்புடன் தொடங்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று அகழ்வின்போது கண்டறியப்பட்ட ஆடையின் சில பகுதிகள், இன்று நடைபெற்ற அகழ்வில் முழுமையாக மீட்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் அகழ்வுப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

ஆயினும், கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வரும் அகழ்வுப் பணிகளில் இதுவரை எந்தவொரு மனித எச்சங்களும் கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.