Breaking News

மகிந்தவின் வக்கிரத்தை குறைக்கும் மருந்து மைத்திரியிடமே மோடி?


இலங்கை ஜனாதிபதித் தேர்தல் அடுத்த ஆண்டு
ஜனவரி 8 ஆம் திகதி நடைபெற உள்ளது. இத் தேர்தலில் மூன்றாவது முறையாக ஜனாதிபதி ராஜபக்ஷ மீண்டும் போட்டியிடுகிறார்.

அவருக்கு எதிராக ராஜபக்ஷவின் சொந்த கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மிக மூத்த தலைவர் மைத்திரிபால சிறிசேன போட்டியிடுகிறார்.  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் 13 ஆண்டுகாலம் பொதுச்செயலராக இருந்த மைத்திரிபால சிறிசேன, ராஜபக்ஷ அரசின் மூத்த அமைச்சராகவும் இருந்தவர். 

தற்போது ராஜபக்ஷவுக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆதரவுடன் பொதுவேட்பளராக நிறுத்தப்பட்டிருக்கிறார். இப்படி ராஜபக்ஷவுக்கு எதிராக ராஜபக்ஷ கட்சியைச் சேர்ந்த ஒருவரே போட்டி வேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பது ஜனாதிபதி தேர்தலை பரபரப்பாக்கி இருக்கிறது.  

அண்டை நாடான இலங்கையில் ஒரு ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் போது, இந்தியப் பேரரசு தனது காய்நகர்த்தல்களை நிச்சயம் ஏதோ திரைமறைவில் செய்திருக்கும் என்பது அரசியலை குறிப்பாக இலங்கை நிகழ்வுகளை கவனித்து வரும் எவருக்கும் இயல்பாக தோன்றக் கூடியது. ஒருவேளை ரணில்  சந்திரிகாவை இணைத்து மைத்திரிபால சிறிசேனவை ராஜபக்ஷவுக்கு எதிரான ஒரு வலுவான வேட்பாளராக இந்தியாவே களமிறக்கியிருக்கலாமோ என்றெல்லாம் எண்ணத்தான் தோன்றும்.  

அதுவும் தமிழகத்தில் எவருமே எதிர்பாராத ஒரு குரல் அதுவும் தமிழ்த் தேசியவாதிகளிடம் இருந்து கூட வராத குரல் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் "ஆஹா... இந்திய அரசு' வேலையை காட்டுகிறது என்றுதான் எண்ணத் தோன்றும். அந்த தமிழகக் குரலுக்குச் சொந்தக்காரர் வேறு யாருமில்லை. 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக அண்மையில் நியமிக்கப்பட்ட ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்தான். அவர்தான் தாம் பதவியேற்ற நாள் முதல், இந்தியாவின் நன்மை கருதியும் தமிழர் நலன் கருதியும் ராஜபக்ஷவை கவிழ்த்துவிட்டு தமக்கு சாதகமான ஒருவரை ஜனாதிபதியாக்க இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ராஜபக்ஷவை "கவிழ்த்தாக'வேண்டும் என்றும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறவர்.  

இப்படியெல்லாம் முடிச்சுப் போட்டுப் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் ஒரு செய்தி யதேச்சையாக கண்ணில்தென்பட்டது. ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியத் தூதுவரும் நிரந்தரப் பிரதிநிதியுமான திலிப் சின்ஹா வரும் 30 ஆம் திகதியுடன் ஓய்வு பெறுகிறார் என்பதுதான் அந்த செய்தி. ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் சற்றே லேசான தீர்மானத்தைக் கூட மிகக் கடுமையாக நீர்த்துப் போகச் செய்யும் "அதிவல்லமை' படைத்த லாபியிஸ்ட். 

ஐ.நா. மனித உரிமை  சபையில் கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்த போது சாட்சாத் திலிப் சின்ஹா புண்ணியத்தால் இந்தியா வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் நடுநிலை வகித்து "இலங்கைக்கு துணை நிற்கும்' கொள்கையை உலகுக்கு பிரகடனம் செய்தது. இப்படி இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறப் போகிறது.  

ஜனாதிபதித் தேர்தலில் கட்சியே உடைந்து ராஜபக்ஷ பலவீனமாக காட்சி தருகிறார். ராஜபக்ஷவுக்கு முண்டு கொடுத்து காப்பாற்றிக் கொண்டிருந்த திலிப் சின்ஹாவும் ஓய்வு பெறப் போகிறார் என ஒவ்வொன்றையும் இணைத்து, ஏதோ இலங்கையில் நடக்கப் போகிறது என்கிற ஆவல் அதிகரிக்கவே செய்கிறது. 

இந்த ஆவல்கள், ஆசைகள், இளங்கோவன்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தையும் போட்டுடைத்துவிட்டிருக்கிறார் வலிமை மிக்க பாரதப் பிரதமர் நரேந்திர மோடி . ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோவின் வரிகளில் சொல்வது எனில் "நெஞ்சிலே ஈட்டி பாய்ச்சி' விட்டிருக்கிறார் பிரதமர் மோடி.  ஆம் நேபாளத் தலைநகர் காத்மண்டுவில் நடைபெற்ற சார்க் நாடுகளின் உச்சிமாநாட்டில் பேசுகையில், "இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதியாக வருவதற்கு வாழ்த்துகள்' தெரிவித்திருக்கிறார் பிரதமர் மோடி. 

இந்த வாழ்த்து நிச்சயமாக வலிந்து சொல்லாத ஒன்றுதான் என ஆறுதல் அடைவோம். ஏனெனில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் சார்க் மாநாடு நடைபெற்ற போது அதில் கலந்து கொண்டவர்களில் இருவர்தான் இப்போது உள்ளனர். ஒருவர் "மீண்டும் பிரதமராக தேர்வாகி வந்திருக்கிற வங்கதேசத்து ஷேக் ஹசீனா; மற்றொருவர் மீண்டும் தேர்தலை சந்தித்து வெல்ல இருக்கிற ராஜபக்ஷ' என்கிற அடிப்படையில் மோடி பேசினார். 

மேலோட்டமாக பார்க்கையில் போகிற போக்கில்தான் பிரதமர் மோடி பேசியதாக தோன்றலாம். ஆனால் இந்தியாவுக்கு பகிரங்க எதிரியாக காட்சி அளிக்கும் பாகிஸ்தானை விட மிக மோசமானதாக உருவெடுத்திருக்கும் இலங்கையின் நிகழ்வுகளை இந்தியா உணர்ந்திருக்குமேயானால் இப்படி இயல்பாகக் கூட வாழ்த்து தெரிவிக்கும் மனோநிலை "பாரத சர்க்காரின்' தலைமை அமைச்சருக்கு வந்திருக்குமா என்பதுதான் தெரியவில்லை.  

கடந்த சில நாட்களுக்கு முன்பு இலங்கை நாடாளுமன்றத்தில்"இந்தியா' ஆதரவாளராக முத்திரை குத்தப்பட்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் பேசியது மிகவும் கவலைக்குரியது. இது குறித்து தமிழக அரசியல் தலைவர்களும் சரி, இந்திய கொள்கை வகுப்பாளர்களும் கொந்தளிக்காமல் துள்ளிக் குதிக்காமல் இருந்தது ஆச்சரியத்துக்குரியதுதான். அதற்கு உள்ளே செல்லும் முன் ஒரு சிறிய வரலாற்று பார்வை இந்த இடத்தில் நமக்கு அவசியமாகிறது.

"இலங்கையின் திருகோணமலை துறைமுகம் யார் கையில் இருக்கிறதோ அவர்கள்தான் தென்னாசியாவை கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள்' என்ற வரலாற்று வாசகம்தான் அது. இது சோழர் காலத்துக்கும் பொருந்தியது. பின்னர் பிரித்தானியர்களுக்கும் பொருந்தியது. இந்திய பிரதமர் இந்திராவோ இதில் மிக உறுதியாகவே இருந்தார்.  

1980களில் அமெரிக்காவின் வொய்ஸ் ஆப் வானொலிக்கு திருகோணமலை பகுதியில் "தளம்'அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதை மிகக் கடுமையாக எதிர்த்த இந்திரா அம்மையார், திருகோணமலையை இந்தியாவின் அனுமதியின்றி எந்த ஒரு நாட்டுக்குக் கொடுக்கக் கூடாது என்று எச்சரித்திருந்தார். அவரது தவப்புதல்வன் ராஜிவ்காந்தி ஈழத் தமிழர் பிரச்சனையில் தவறுகள் இழைத்தவர்தான். 

இருப்பினும் 1987 இல் இந்தியா  இலங்கை ஒப்பந்தம் உருவாக்கிய போது மறக்காமல் திருகோணமலை துறைமுகம் மீதான இந்தியாவின் மேலாதிக்கத்தை வலுப்படுத்தும் சரத்தையும் இணைத்தவர். 1990களுக்குப் பின்னர் இந்தியாவில் கூட்டணி அரசு ஏற்பட, வெளியுறவுக் கொள்கையானது அரசியல்வாதிகளின் கைகளில் இருந்து அதிகாரிகளுக்கு மாறிப் போனது. 

அத்துடன் திருகோணமலை மீதான மேலாதிக்கம் ஊசலாட்டம் காணத் தொடங்கியது. மெல்ல மெல்ல சீனா, இலங்கைக்குள் காலடி எடுத்து வைக்க கொஞ்சம் பதற்றத்துடன் திருகோணமலையை பற்றிக் கொண்டு தக்க வைக்க போராடியது இந்தியா.  விடுதலைப் புலிகள் ஆளுமைக் காலத்தில்கூட அனல் மின் நிலையம் அமைக்கப் போவதாக இலங்கை அரசுடன் ஒப்பந்தம் போட்டு தமது"திருகோணமலை' கொள்கைக்கு உயிர்ப்பு கொடுத்து வந்தது இந்தியா. 

இந்த "திருகோணமலை'யின் இந்திய பிடிப்பை தளரச் செய்யும் வேலையைச் செய்து வருபவர் ராஜபக்ஷதான்! இலங்கை நாடாளுமன்றத்தில் இரா. சம்பந்தன் இப்படித்தான் பதிவு செய்திருக்கிறார் ."திருகோணமலை துறைமுகத்தை சீனாவுக்கு தாரை வார்க்க இலங்கை அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துவிட்டதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. இது இந்தியா இலங்கை ஒப்பந்தத்துக்கு எதிரானது. 

சீனாவை முன்வைத்து இந்தியாவை இந்தத் தீவில் இல்லாது ஆக்குவது என்பது இலங்கைக்கு எதிரானதாகவே அமையும்' என்று எச்சரித்திருக்கிறார். இப்படி இந்தியா மீதும் ஈழத் தமிழர் மீதும் இரா. சம்பந்தன்களுக்கும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்களுக்கும் இருக்கும் பதற்றத்தில் சிறிது கூட இந்திய மத்திய சர்க்காருக்கு இருக்காதா? அதனால்தான் ராஜபக்ஷ கட்சியை உடைத்து மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி தேர்தலில் இந்தியா நிறுத்தியிருக்கலாம் என்ற எண்ணம் எல்லோருக்கும் எழுந்தது. 

ஆனால் தற்போது "ராஜபக்ஷ' மீண்டும் ஜனாதிபதியாக வாழ்த்து தெரிவித்திருப்பதைப் பார்த்தால் என்னவென்று சொல்வது? இந்தியாவின் இராஜதந்திர "உள்ளடி வேலையாக இருக்குமோ? அல்லது வழக்கமாக சீனாவை மனதில் வைத்து இலங்கையிடம் "சரணாகதி' ஆன கதையா? என மீண்டும் மீண்டும் யோசிக்க வைப்பது தென்னாசியாவின் வல்லமை மிக்க இந்தியாவுக்கு நல்லது அல்ல. 

சீனாவை முன்வைத்து இந்தியாவை மிரட்டும் இலங்கையின் போக்குக்கு திட்டவட்டமான முடிவு கட்டும் கொள்கையை வகுக்க வேண்டியது இந்தியாவின் முன்னுள்ள பணி. இலங்கை ஜனாதிபதித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வலுவான இந்திய வெளியுறவுக் கொள்கையை நிலைநாட்டவும் தென்னாசிய பிராந்தியத்தின் வல்லரசு இந்தியாவே என்பதையும் நிலை நிறுத்தவும் உரிய வியூகம் வகுக்க வேண்டிய தருணம் இதுவே..!