Breaking News

புத்தாண்டு கொண்டுவரும் அத்தியாயம் இரண்டு…

வாசகர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். புத்தாண்டை முன்னிட்டு புத்தாண்டு கொண்டுவரும் அத்தியாயம் இரண்டு…சிறப்பு கவிதை
இயற்கை எழுந்து நின்று
இன்பமாய்ப் பாடுது
புதிய ஆண்டுதனை
வரவேற்று ஆடுது
புன்னகைத் துறல்களை
முகங்களில்த் தேடுது
பூரிப்பைத் தந்து பல
புதுமை செய்யத் தூண்டுது
புண்பட்ட மனங்களை
மெல்லிறகால் வருடி
பண்படுத்த நாடும் புதுப்
பண்ணெடுத்துப் பாடி
புயலடித்துப் போன
நிலம் மேவி வந்து
புலர்வொன்றைக் காட்டும் பல
செயல் கூடும் இன்று – வழி
புரியாது துடித்தோம்
மனம் நொந்து நொந்து
புதுப் பரிணாமம் சூழும் – இனி
விடியலே நாளும்.
நீதியின் துடுப்புகள் – நீரில்
அசையத் தொடங்குது
நித்திலப் பெருங்கடலில்
நியாயங்கள் மிதக்குது
சத்திய விடுதலையின்
சாயல்கள் தோன்றுது – கொடுஞ்
சாவுகள் தாண்டியும் கரை
சேர்ந்திடப் போகுது .
அடிமை எனும் பொறியின்
அச்சாணி உடையும் – புது
விடிவின் பொறிகள் அதை
முச்சூடும் அழிக்கும்
தமிழின் நாதம் – இத்
தரணியெலாம் ஒலிக்கும்
தமிழீழப் பரணிதனை
தாயகம் முழக்கும்.
புதுவருடக் காற்றே நீ
புறப்பட்டு வந்து
புலிகள் உறங்கும் – துயில்
நிலங்களில்த் தங்கு – அவர்
உளம் பேசும் மொழியின்
உணர்வினைக் காவி
உலகெலாம் வாழும் – எம்
உறவிடம் தூவு
உறங்க நேரமில்லை – உற்ற
தருணம் இதுவென்று
ஓங்கி உரைத்திடு
ஒருபெரும் புதுமை செய்.
சாகா வரம் வாங்கி
சயனிக்கும் மாவீரர்
வீரத்தை அள்ளி வந்து
விதைத்துவிடு மனங்களில்
புத்தாண்டுப் பரிசாக
புதுப் பொலிவைக் கூட்டு
செத்தார் பகைவர் எனும்
செய்தியை செவிகளிற்சேர்
சீவிச் சிங்காரிக்க
வரவில்லை தேதி ஒன்று
சீறிப் பாயும் கணைகளாய்
சிலிர்த்தெழ, வரும் மாற்றம் ஒன்று.
பதுங்கியிருந்து பின்
பாய்வதுதான் புலிக்குணம்
ஒதுங்கி வழிவிட்டு
ஓடுவதே பகைக்குணம்
நெருங்கி நாம் வருகிறோமென்று
தெரியாமல் சிரிக்கும்
நரிகளை நாடி
நகர்ந்து செல்
நிலவரம் அறிந்திடு காற்றே நீ
புலனாய்வுப் பணி செய்து
வரியணியாப் புலியாகு
புயலொன்று புலியாகும்
புதுச்சரிதம் நீயெழுது – யாரும்
புகமுடியாப் பகை வீட்டை
தகர்த்தெறிந்த பெருவீரக்
கரும்புலிகள்தமை நீயே
உனக்குள்ளே கொண்டாய் – அவர்
கனவுகள் உன்னிடமே காற்றே
நிதானிக்க நேரமில்லை.
நற்பொழுது ஒன்று வருகுது தேடி
பொற்பொழுதாய் ஆக்குவோம் நாடி – தமிழர்
நாசிக்குளெல்லாம் புகுந்து ஓடி
சுவாசத்தில் மூட்டிடு விடுதலைத்தீ.
புரட்சியின் புதுமுகத்தைப்
புத்தாண்டே கொண்டுவரும்
அதிர்ச்சிகள் பலவற்றை
எதிரிக்குச் சொல்லித் தரும்
புல் பூண்டு செடியெல்லாம்
புலியாகி நிமிர்வது நிஜம் – தலைவர்
இயற்றிய இலட்சிய வேள்வி இது
இரண்டாம் அத்தியாயம்.
கண்ணீரின் துளிகள் வான்பொழியும்
தண்ணீராய் மாறி
மண்ணின் தாகம் தீர்க்கும் – அந்தப்
பொன்னான நாள் வரும்
செந்நீரில் குளித்த விதைகள்
முளைகொண்டு
செந்தேசம் மீட்டுத் தரும்
சாத்தான்கள் காலடியில்க் கிடக்கும் – எம்மவர்
சாம்பல்கள் தணலாகும்
முள்ளிவாய்காலில் மூ டிய வாய்கள்
மோகனம் பாடும் – தமிழர்
முற்றங்கள் தோறும்
வெற்றிகள் கூத்தாடும்
முகையவிழ்ந்து தமிழீழப்
பூ சிரிக்கும் – தலைவர்
முடி சூடும் திருநாளில் – புலிக்
கொடி பறக்கும்.
‘‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்‘‘
புலத்திலிருந்து- கலைமகள்