Breaking News

கௌரவ சேனையில் ஒரு விதுரனைக் கண்டேன்

நடைபெறப் போகும் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்காக பிரசாரம் செய்யப் போவதில்லை என வடக்கு மாகாண சபையின் முதலமைச்சரும் ஓய்வுபெற்ற நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரன் அறிவித்து ள்ளார். 

வடக்கு மாகாணத்தில் தேர்தல் பிரசாரம் உச்ச கட்டத்தை அடைந்துள்ள நேரத்தில் , வடக்கின் முதலமைச்சர் மேற்போந்த தனது கருத்தை வெளியிட்டு உள்ளார்.

வடக்கு மாகாணத்தில் அதிகளவான அரசியல் கட்சிகளும் சுயேட்சைக்குழுக்களும் களமிறங்கி இருக்கும் இவ்வேளையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்காக நான் பிரசாரம் செய்யமாட்டேன் என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்தை எவரும் சாதாரணமாக கருதி விடக்கூடாது. 

வடக்கின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் களமிறங்கி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்காக தேர்தல் பிரசாரம் செய்தால் மட்டுமே கூட்டமைப்பு தப்பித்துக் கொள்ளும் என்ற நிலையில், முதல மைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விடுத்த அறிவிப்பு தமிழ் மக்களை ஆழமாகச் சிந்திக்க வைத்துள்ளது. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராகப் போட்டியிட்டு வடக்கு மாகாணத்தின் முதலமைச் சராகத் தெரிவு செய்யப்பட்ட ஒருவர்; தான் சார்ந்த கட்சிக்காக, தேர்தல் பிரசாரம் செய்ய மாட்டேன் என்று சொல்வதற்குள், தேர்தல் பிரசாரம் அவரின் மனச்சாட்சிக்கு விரோதமாக உள்ளது என்பது தெளிவாகின்றது.

“என்னை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வடக்கு மாகாண முதலமைச்சராக தேர்ந்தெடுத்திருப்பினும் அவர்களின் தேர்தல் களங்களில் இறங்கி அவர்களை ஆதரித்து பக்கச் சார்பாகப் பிரசாரம் செய்வது எனக்கு அழகல்ல. 

“என்னைப் பொறுத்தவரையில் மக்கள் யார் யாரைத் தேர்ந்தெடுக்கிறார்களோ அவர்கள் யாராக இருப்பினும் அவர்களுடன் சேர்ந்து அந்நியோன்னியமாக இயங்குவது எனக்கொரு பிரச்சினையுமில்லை.

ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மக்கள் நலனுக்காக அர்ப்பணிப்புடனும் ஐக்கியத்துடனும் கடமையாற்றக் கூடியவர்களாக இருக்க வேண்டும். கட்சிகளின் நலனைவிட எமது மக்களின் நலனும் உரித்துக்களுமே முன்மை பெறவேண்டும்.” 

இவ்வாறு வடக்கின் முதலமைச்சர் கூறியதற்குள் எல்லா அர்த்தமும் அடங்கி உள்ளது. யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று ஒரு முடிவுக்கு வர முடியாதவர்களுக்கு முதல்வர் விக்னேஸ்வரன் அவர்கள் மிகத்தெளிவான அறிவுரையைக் கூறியுள்ளார். 

எனது கட்சி, என்னை முதலமைச்சராக்கிய கட்சி என்பதற்காக நான் பக்கச் சார்பாக தேர்தல் பிரசாரம் செய்ய முடியாது என்ற முதலமைச்சர் விக்னேஸ்வரனின் முடிவு ஓய்வுக்குப் பின்னரும் நீதியரசர் நீதியரசர்தான் என்பதை இந்த உலகம் முழுமைக்கும் அவர் எடுத்துக் காட்டியுள்ளார். 

கெளரவ சேனையில் இருந்த பீஷ்மர், துரோணர் மீது எனக்கு மதிப்பு இருந்தபோதிலும் கெளரவ சேனையில் வில் முறித்த விதுரனே பாரத இதிகாசத்தில் எனக்கு பிடித்தமான பாத்திரம்.

நீதியரசர் முதல்வர் விக்னேஸ்வரனை ஒரு விதுரனாக, அவரின் வாக்கை விதுர நீதியாகப் பார்க்கிறேன். தமிழ்மக்களே! உங்கள் மனச்சாட்சிதான் உங்களுக்கு நீதிபதி என்பதை மறந்து விடாதீர்கள்.

வலம்புரி ஆசிரியர் தலையங்கம்