பஷில் வெளிநாடு செல்ல தடை
திவிநெகும நிறுவனத்தில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ மற்றும் திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஆர்.கே.கே.ஏ.ரணவக ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், இருவரது வெளிநாட்டு பயணங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சிக்காலத்தில் திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பான வழக்கு விசாரணையில் உள்ள நிலையில், இன்று (வியாழக்கிழமை) அது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தால் மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதவான் பத்மினி ரணவக, இருவரையும் தலா 5 இலட்சம் ரூபா ரொக்கப்பிணை மற்றும் 5 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் விடுவித்தார். அத்தோடு, இருவரது வெளிநாட்டு பயணங்களுக்கும் தடைவிதித்தும் நீதவான் உத்தரவிட்டார்.
திவிநெகும திணைக்களத்தின் நிதி மோசடி தொடர்பில், பஷில் ராஜபக்ஷ உள்ளிட்ட மூவர் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு இரண்டு மாதங்களின் பின்னர் கடுவலை நீதவான் நீதமன்றால் விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.








