Breaking News

வடமாகாணசபையின் தீர்மானம் குறித்து உடனடியாக கருத்து கூற முடியாது

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கைள ஒன்றிணைத்து, சமஷ்டி முறையிலான ஒரு ஆட்சி அதிகாரத்தினை கோரும் வகையில் வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தற்போதைக்கு கூற முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அத்துடன், வடமாகாணசபையின் சமஷ்டியைக் கோரும் தீர்மானம் குறித்து அரசாங்கம் மிகுந்த அவதானத்துடன் செயற்பட்டு வருவதாக அமைச்சர் கபீர் ஹசிம் குறிப்பிட்டுள்ளார். கண்டியில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சமஷ்டி தீர்வு மற்றும், தமிழர்களுக்கான தனி மாநிலம் என்பவற்றை உள்ளடக்கியதாக வடக்கு மாகாணசபையினால் தயாரிக்கப்பட்ட தீர்வு திட்ட யோசனை, நேற்று முன்தினம் சில திருத்தங்களுடன் வடக்கு மாகாணசபையில் நிறைவேறியது.

இந்நிலையில், நேற்றைய செய்தியாளர் சந்திப்பின்போது, இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டமைக் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்று ஊடகவியலாளர் ஒருவரினால் கேள்வி எழுப்பப்படதற்கு பதில் வழங்கும் போது, அமைச்சர் கபீர் ஹசிம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.