இலங்கைக்கு 3 பில்லியன் கடன் வழங்குகிறது ஆசிய அபிவிருத்தி வங்கி
இலங்கையின் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு, 3 பில்லியன் டொலர் கடன் வழங்குவதாக ஆசிய அபிவிருத்தி வங்கி உறுதியளித்துள்ளதாக, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
இந்தக் கடன் குறைந்த வட்டியில், இலங்கைக்கு அடுத்த மூன்று ஆண்டுகள் வழங்கப்படும்.இது தவிர, சிறிய மற்றும் நடுத்தரக் கைத்தொழில் துறைக்கு தனியாக உதவி வழங்கவும் ஆசிய அபிவிருத்தி வங்கி இணங்கியுள்ளது.
ஜேர்மனியின் பிராங்போர்ட் நகரில் கடந்த ஆசிய அபிவிருத்தி வங்கியின், 49ஆவது நிதி அமைச்சர்கள் மாநாட்டிலேயே இந்த இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது.ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடன், பிரதான அபிவிருத்தித் திட்டங்களில் முதலீடு செய்யப்படும்.
புதிய தொடருந்து, துறைமுக அபிவிருத்தி, மின்சார வலையமைப்பு, நெடுஞ்சாலைகள், போக்குவரத்து முறைகளில் இந்த நிதி செலவிடப்படவுள்ளது ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு ஆண்டு தோறும், 400 தொடக்கம், 500 மில்லியன் டொலர் கடனை வழங்கி வருகிறது. அதற்கு மேலதிகமாகவே, இந்தக் கடன் வழங்கப்படவுள்ளது.
அதேவேளை, இலங்கை மற்றும் நடுத்தரக் கைத்தொழில் துறை அபிவிருத்திக்காக ஆசிய அபிவிருத்தி வங்கி மேலும் 200 மில்லியன் டொலரை வழங்கவுள்ளது.








