Breaking News

இறுதி யுத்தத்தின்போது எனது கோரிக்கையை இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளவில்லை!



இறுதி யுத்தம் நடைபெற்ற சந்தர்ப்பத்தில் பொது மக்களை காப்பாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தான் விடுத்த கோரிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாரகரன் மற்றும் ஸ்ரீலங்கா அரசாங்கம் ஆகியோர் ஏற்றுக்கொள்ளவில்லை என தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஜனநாயக தமிழ்த் தேசிய முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அந்த சந்தர்ப்பத்தில் (2009 ஏப்ரல் மாதம்) தான் தமிழ்க் கூட்டமைப்பு, புலிகளின் தலைவர் மற்றும் ஸ்ரீலங்கா அராசங்கம் ஆகியோருக்கு தனித்தனியாக கடிதம் எழுதியதாகவும் எனினும் எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் எந்தவொரு தரப்பும் எடுக்கவில்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

இறுதி யுத்தத்தின் போது பொதுமக்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கிய நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது கடமையை செய்வதற்கு தவறியதாகவும் வீ.ஆனந்தசங்கரி மேலும் தெரிவித்தார்.