Breaking News

யுத்தம் நிறுத்தம் தொடர்பிலான எனது கோரிக்கையை கூட்டமைப்பு ஏற்கவில்லை!



யுத்த நிறுத்தத்தை மேற்கொள்ளும் வகையில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தான் அழைத்ததாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஜனநாயக தமிழ் தேசிய முன்னணியின் ஏற்பாட்டில் கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

யுத்த காலப் பகுதியில் கிழக்கு மாகாணத்தை அரசாங்கம் கைப்பற்றியதன் பின்னர் தான் இலங்கை தமிழரசுக் கட்சியின் தற்போதைய தலைவர் மாவை சேனாதிராஜாவை தொடர்புக் கொண்டு தான் இந்த கோரிக்கையை விடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

வட மாகாணத்தில் யுத்தம் நடத்தப்படும் பட்சத்தில் பாரிய உயிரிழப்புக்கள் ஏற்படும் எனவும், அதனை தடுத்து நிறுத்த அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென தான் நாடாளுமன்றில் வைத்து அவரிடம் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.

எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்தார்.

இதேவேளை யுத்தக்குற்றச்சாட்டுகள் தொடர்பி்ல் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அவர், யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் சர்வதேச தலையீட்டுடனான விசாரணை பொறிமுறை ஒன்று அவசியம் என்பதை ஜனநாயக தமிழ்த் தேசிய முன்னணி வலியுறுத்தும் எனவும் குறிப்பிட்டார்.