Breaking News

மட்டக்களப்பு மேற்கு எல்லையில் காடழிப்பு ; சிங்கள குடியேற்றத்திற்கான அறிகுறி



மட்டக்களப்பின் மேற்கு எல்லையில் பல்லாயிர க்கணக்கான ஏக்கர் காடு சட்டவிரோதமாக அழிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண விவசாய மற்றும் கால்நடை அபிவிருத்தி அமைச்சர் துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.

இந்த காடழிப்பை அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த பெரும்பான்மை சிங்கள சமூகத்தினர் மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய மேற்கு எல்லையில் அடையாளம் காணப்பட்ட 50 ஆயிரம் ஏக்கர் காணி மட்டக்களப்பு மாவட்ட கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரை எனத் தெரிவித்த அவர், காடழிப்பினால் மட்டக்களப்பு கால்நடை பண்ணையாளர்கள் அச்சுறுத்தல்களையும் கால்நடை இழப்புக்களையும் எதிர்கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

காடழிப்பின் பின்னணியில் பௌத்த பிக்குகள் செயற்படுவதாகவும், இந்த நடவடிக்கை சிங்கள மக்களின் திட்டமிட்ட குடியேற்றத்திற்கான அறிகுறிகளாக அமைவதாகவும் கிழக்கு மாகாண விவசாய மற்றும் கால்நடை அபிவிருத்தி அமைச்சர் துரைராஜசிங்கம் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

அத்துடன் பௌத்த பிக்கு ஒருவர் குறித்த பகுதியில் தங்கியிருந்து விகாரை அமைப்பதற்கான அடித்தளமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.