Breaking News

கைதான முன்னாள் போராளிகளுக்கு மீண்டும் புனர்வாழ்வு?



அண்மைய நாட்களாக கைதுசெய்யப்பட்ட, புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலையான விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளை, மீண்டும் புனர்வாழ்வுக்கு அனுப்புவதற்கு திட்டமிடப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடக்கில் தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் வடக்கு கிழக்கில் தொடர்ச்சியாக கைதுசெய்யப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட முன்னாள் தளபதி ராம், சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் முன்னாள் தளபதி நகுலன், திருகோணமலை மாவட்ட முன்னாள் புலனாய்வுத்துறை பொறுப்பாளர் கலையரசன், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் புலனாய்வுத்துறை பொறுப்பாளரான பிரபா எனப்படும் கலைநேசன் உள்ளிட்ட பலர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் அடுத்தடுத்து கைதுசெய்யப்பட்டு விசாரணை எனும் போர்வையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

யுத்த காலத்தில் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்ட மற்றும் சரணடைந்த இவர்கள், புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் கைதுசெய்யப்பட்டமை, அவர்கள் மத்தியில் மீண்டும் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.

யுத்தம் இடம்பெற்ற பகுதிகளில் வெடிபொருட்கள் மற்றும் தற்கொலை அங்கி என்பன மீட்கப்படுவது சாதாரண விடயமென்றும், அதுகுறித்து கரிசனை கொள்ளத் தேவையில்லையெனவும் கூறிய அரசாங்கம், மறுபுறத்தில் முன்னாள் போராளிகளை கைதுசெய்து வருவதானது, நல்லிணக்கம் என்று வெறும் மாயையை உருவாக்கி, கண்துடைப்புக்காக சில நடவடிக்கைகளை மேற்கொள்கின்றதா என சந்தேகம் கொள்ள வைத்துள்ளதோடு, கடந்த ஆட்சியாளர்களைப் போன்று செயற்படுகின்றாக என்ற கேள்வியையும் மக்கள் மத்தியில் தோற்றுவித்துள்ளது.

இச்செயற்பாடானது, புனர்வாழ்வுக்குப் பின்னர் சமூக வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள ஏனைய போராளிகள் மத்தியில் அச்சத்தையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கைதுகளுக்கான காரணம் குறித்து தமிழ்த் தரப்பால் வினவப்பட்டு வருகின்ற போதும், கைதுகள் தொடர்கின்றதே தவிர, காத்திரமான பதிலொன்றும் இதுவரை அரசாங்கத்திடமிருந்து வெளிவரவில்லை.