பேரவையின் தீர்வுத்திட்ட வரைவு ஐ.நாவிடம் கையளிப்பு
ஸ்ரீலங்காவிற்கான ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி உனா மக்கோளி (Una McCauley) தலைமையிலான குழுவிற்கும், தமிழ் மக்கள்பேரவை உறுப்பினர்களிற்குமான விசேட சந்திப்பு ஒன்று கொழும்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இரண்டு மணித்தியாலங்கள் நீடித்த இச்சந்திப்பில் பரஸ்பரம் இரு பகுதியினரும் பல விடயங்களைமிகவும் வெளிப்படையாகப் பேசினர்.
இதன் போது ஸ்ரீலங்காவில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்கு எவ்வாறு சர்வதேசம் தற்போதைய ஸ்ரீலங்கா அரசாங்கத்தை பலப்படுத்தல்மற்றும் செயல்படுத்தல்களில் பொறுமை காத்தல் என்ற கோணத்தில் செயற்படுவதும் அதில் ஐ. நா. இன் நடுநிலைத்தன்மையும் பேரவையினரிற்கு எடுத்துக்கூறப்பட்டது.
ஐக்கிய நாடுகளின் நடுநிலைத்தன்மையை ஏற்றுக்கொண்ட பேரவையினர், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்கு, போரில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான பொறுப்புக்கூறலும் அதற்கான ஒரு நீதியான விசாரணையின் அவசியத்தையும் எடுத்துக்கூறியுள்ளனர்.
மேலும் ஏன் ஒரு சர்வதேச விசாரணையை தமிழர்கள் வேண்டி நிற்கிறார்கள் என்பதை வரலாற்றுப் படிப்பினையின் அடிப்படையில் விரிவாக தெளிவுபடுத்தியதுடன், தமிழர்கள் ஸ்ரீலங்காவில் கொளரவமாக சமவுரிமையுடன் வாழ்வதற்காக தமிழர்களின் பொறுமையின் வரலாற்றையும், தெளிவுபடுத்தி, நம்பிக்கை கட்டியெழுப்புதல் என்பதுபொறுப்புக்கூறலிலேயே ஆரம்பிக்கப்படவேண்டியதன் அவசியத்தையும் தெளிவுபடுத்தினர்.
அத்தோடு பேரவையின் பொறுப்புக்கூறலுக்கான உபகுழுவின் செயற்திட்டங்களும் விரிவாகவிளக்கப்பட்டது.இச்சத்திப்பின் முடிவில் பேரவையின் தீர்வுத்திட்ட இறுதி வரைபு ஐ. நா. வதிவிடப்பிரதிநிதியிடமும் கையளிக்கப்பட்டது.
இதேவேளை, நேற்றைய தினம் தமிழ் மக்கள்பேரவையினர் மற்றும் ஸ்ரீலங்காவிற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருக்கும் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களின் சுதந்திரத்திற்கான ஐ.நா. மனிதவுரிமை ஆணையாளர் அலுவலகத்தின் விசேட பிரதிநிதி மொனிக்காபின்ரோ (Monicca Pinto) தலமையிலான தூதுக்குழுவினருக்கும் இடையிலான ஒரு சந்திப்பும் யாழ் நகரில் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.








