Breaking News

சீமெந்தையும் செங்கல்லையும் கொண்டு நல்லிணக்கத்தை அடைய முடியாது- ஜனாதிபதி



ஜெனீவா யோசனையை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வரும் நிலையில் வடக்கில் பொதுமக்களின் நிலங்களை படையினர் மீளக்கையளிக்கும் செயற்பாட்டை ஜனாதிபதி நியாயப்படுத்தியுள்ளார்.

ஜப்பானில் இலங்கையர்கள் மத்தியில் உரையாற்றிய அவர் 27 வருடங்களாக பிடித்து வைக்கப்பட்டிருந்த நிலங்கள் மக்களுக்கு திருப்பி கையளிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் வடக்குக்கும் தெற்குக்கும் இடையிலான நல்லிணக்கத்தை சீமெந்தையும் செங்கல்லையும் கொண்டு செய்துவிட முடியாது.போர் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் மேற்கொள்ள வேண்டிய பணிகள் உரியவகையில் செய்யப்படவில்லை.

எனவேதான் இன்று சர்வதேச சமூகம் இலங்கையிடம் இருந்து பதில்களை எதிர்ப்பார்க்கிறது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை வெளியிட்டுள்ள இந்திய ஊடகம் ஒன்று இலங்கையின் வடக்கில் இன்னும் 12750 ஏக்கர் பொதுமக்களின் காணிகள் படையினர் வசம் இருப்பதாக மாற்றுக்கொள்கைக்கான நிறுவனத்தை ஆதாரம் காட்டி தெரிவித்துள்ளது.