Breaking News

இலங்கை தொடர்பான முக்கிய அறிக்கை, ஐ.நா பிரதிநிதிகளால் இன்று வெளியீடு

சித்திரவதைகள் மற்றும் நீதிமன்ற சுயாதீனத்துவம் தொடர்பிலான ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதிகள் ஸ்ரீலங்கா தொடர்பான முக்கிய அறிக்கை ஒன்றை இன்று சனிக்கிழமை வெளியிடவுள்ளனர்.

குறித்த பிரதிநிதிகளால் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கை மற்றும் பரிந்துரைகள் என்பவற்றை கொழும்பில் அமைந்துள்ள ஐ.நா கிளை காரியாலயத்தில் வைத்து பகிரங்கமாக வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் நீதிமன்ற சுயாதீனத்துவம் தொடர்பிலான ஐ.நாவின் விசேட நிபுணர் மொனிகா பின்டோ மற்றும் சித்திரவதைகள் தொடர்பில் ஆராயும் விசேட நிபுணர் ஹுவான் ஈ மென்டிஸ் ஆகியோர் கடந்த 29ஆம் திகதி கொழும்பை சென்றடைந்தனர்.

ஸ்ரீலங்காவில் தங்கியிருந்த காலப்பகுதியில் இந்த நிபுணர் குழு ஸ்ரீலங்காவின் நீதிமன்ற சுயாதீனத்துவம் மற்றும் சித்திரவதைகள் ஆகிய விடயங்கள் குறித்து பல்வேறு தரப்பினரிடையே பேச்சுக்களை நடத்தியிருந்தனர்.

அத்துடன் பல்வேறு ஆய்வுகளையும் நடத்தியிருந்தனர்.

இந்த நிலையிலேயே இந்த ஆய்வுகளின் பிரதிபலனாக அறிக்கை ஒன்றையும் அதற்கான பரிந்துரைகளையும் இன்றைய தினம் வெளியிடவிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன.