நவம்பரிலை தேர்தல் நடந்தால் எப்படியிருக்கும்?
கார்த்திகை மாத வானம் மழை முட்டியிருந்தது. திரும்பவும் மழை வரப் போகுது… வானத்தை தன் கண்களால் அவதானித்தபடி சொன்னார் இரத்தினத்தார். மழை கொட்டி தீர்ந்த பொழுதில் நாவல் மரம் தண்ணீரை இலைகளில் சுமந்தபடியிருந்தது. கனத்த இதயம் கொண்ட பெண்போல காட்சியளித்தது நாவல். எப்பிடியும் இரத்தினத்தார் வம்புக்கு இழுப்பார் என்று நினைத்திருந்தார் சண்முகம்.
“என்ன இரத்தினமண்ணை இந்த முறை மாவீரர் தினம் என்ன மாதிரி?”
சும்மா இருந்த இரத்தினத்தை உருவேற்றும் விதமாக கேட்டான் உருத்திரன். குரலை செருமிய இரத்தினத்தார் “அடேய்.. உந்த ஸ்ரீலங்கா அரசாங்கத்திட்டை நாங்கள் கெஞ்சி மண்டாடி, உவையின்டை தேர்தல்களை நவம்பர் மாதத்திலை நடத்தச் சொல்லுவம்…” என்றபடி அநாயசமாக சிரித்தார் இரத்தினத்தார்.
“பிறகென்ன? தேர்தல் காலத்திலை மாவீரர் துயிலும் இல்லம் கட்டித் தருவோம் எண்டிச்சினம்.. என்று இரத்தினத்தார் சொல்ல, “ஓம் அண்ணை தேர்தலிலை மாவீரரைப் பற்றிக் கதைப்பினம். போராளியளைப் பற்றிக் கதைப்பினம். தலைவரைப் பற்றிக் கதைப்பினம்..” எடுத்துவிட்டான் இலட்சுமனனும்.
“நல்லாய் கதைப்பினம்.. தேர்தல் முடிய எல்லாத்தையும் மறந்திடுவினம்..” இரத்தினத்தார் கோவம் பொங்கச் சொன்னார். “அண்ணை தேர்தல் காலத்திலை கதைக்கிற கதையெல்லாம் ஒரு கதையே… அங்கஜனும் தான் சொன்னவர் தனக்கு தலைவர் பிரபாகரன் எண்டு. விஜயகலாவும் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினவா எல்லோ…” என்றான் உருத்திரன்.
சண்முகத்தாருக்கு பெரிய சங்கடமாக இருந்தது. அவர் இன்னும் மௌனமாகவே இருந்தார். மாறி மாறி ஒவ்வொரு முகங்களையும் பார்த்தபடி இருந்தார்.
அங்கஜனும் விஜயகலாவும் சம்பந்தரும் மாவையும் ஒண்டே எடா… என்றார் நீண்ட மௌனத்தை கலைத்த சண்முகத்தார். “பிறகென்ன தேர்தல் காலத்திலை எல்லாரும் ஒரு மாதிரித்தானே கதைச்சவை..” என்றான் இலட்சுமனன், கொடுப்புக்குள் சிரிப்பை அடக்கியபடி.சண்முகத்தின் முகம் சுருங்கியது.
“தம்பி போன தேர்தலிலை இயக்கத்தைப் பற்றியும் தலைவர்களைப் பற்றியும் மாவீரர் துயிலும் இல்லம் கட்டுவம் எண்டுறதைப் பற்றியும் ஆரும் கதைக்கலாம். மைத்திரியும் கதைக்கலாம்.. செயல்தான் முக்கியம்.. செயலிலை அதை செய்யிறதுதான் தலைமைத்துவத்தின்டை” திறமை போட்டுடைத்தார் இரத்தினத்தார்.
“எங்கடை அரசியல்வாதியள் சொல் வீரர்கள் எண்டுற இரத்தினமண்ணை சொல்ல வாறார் போல..” இலட்சுமனன் சிரித்தான்.
“அது சரிதான் அண்ணை. மகிந்தவின்டை காலத்திலை மாவீரர் தினத்தை ஒளிச்சுக் கொண்டாடினம். மைத்திரியின்டை காலத்திலையும் மாவீரர் தினத்தை ஒளிச்சுக் கொண்டாடிப் போட்டு, இதை நல்லாட்சி அரசு எண்டும் நல்லிணக்க அரசு எண்டும் என்னண்டு எங்கடை அரசியல்வாதியள் சொல்லுறினம்?“ உருத்திரனின் கேள்வி சண்முகத்தாரை திரும்ப வாய் திறக்க வைத்தது.
“தம்பி.. உனக்கு உதுகள் விளங்காது. அரசாங்கம் இயக்கத்தை தடை செய்திருக்குது.. பிறகென்னண்டு இஞ்ச மாவீரர் தினம் கொண்டாடுறது? சம்பந்தரைப் பிடிச்சு உள்ளை எல்லோ போடுவாங்கள்..” சண்முகத்தார் கையாலாகாதரவாக சொல்லி முடித்தார்.
“தடை செய்யப்பட்ட இயக்கத்தைப் பற்றி தேர்தல் காலத்திலை என்னண்டு பேசிறியள்? தமிழ் கூட்டமைப்பிலை இருந்து சிங்கள சுதந்திரக் கட்சி கூட்டமைப்பு வரை தேர்தல் காலத்திலை கதைக்கலாம்.. எண்டால் இப்ப ஏன் செய்ய ஏலாது…” சண்முகத்தார் உருத்திரனின் எதிர்பாராத கேள்வியால் முடங்கினார்.
“தம்பி.. எங்கடை மாவீரர்களைப் பற்றி இவையள் இதய சுத்தியோடை கதைக்கேல்லை… அங்கஜன் கதைச்சதை இவையளும் கதைக்கிறதிலையே இது உனக்கு விளங்கேல்லையே?..” இரத்தினத்தாரின் பேச்சு சண்முகத்தின் கட்சிப் பாசத்தை உடைத்து, உள்ளுக்குள் ஒப்புக்கொள்ள வைத்தது.
வெளிக் காட்டால் இருந்தார் சண்முகத்தார்.
“உப்பிடியே ஒவ்வொரு மாவீரர் தினத்தையும் கடந்து போறதுதான் உவையின்டை திட்டமோ..” மற்றக் கேள்வியை கிளப்பினான் இலட்சுமனன். இப்பிடியே போனால் எங்கடை நியாயம் சொல்லாமல் மறைக்கப்படும். எங்கடை நியாயத்தை ஏற்கக் கூடாது எண்டுறதிலை மகிந்த மைத்திரி எல்லாம் நல்ல தெளிவாய் இருக்கினம்..” சொல்லி முடித்த இரத்தினத்தாரைப் பாத்தார் சண்முகத்தார்.
“சண்முகம்! மாவீரர்களை ஏற்றுக்கொண்டால், சிங்களன் நடத்தினை இனப்படுகொலையை ஏற்றுக்கொள்ள வேணும்.. சிங்களவன் நடத்தினை இனப்படுகொலையை ஏற்றுக்கொண்டால், தமிழீழத்தை ஏற்றுக்கொள்ள வேணும்.. ஏனெண்டால் சிங்களவனின்டை மனநிலைக்கு தமிழீழம்தான் எங்களுக்கு தீர்வு எண்டு எல்லாருக்கும் தெரியும்தானே…” மேலும் விளக்கினார் இரத்தினத்தார்.
“அது சரிதானடா.. எங்கடை மாவீரர்கள்தான் எங்களுக்காக எண்டைக்கும் போராடுறினம்.. வரலாற்றிலை, எத்தினை நூறு வருசம் கடந்தும் எங்களுக்காய் பேராாடுற சக்தி அவங்கள்தான்…” சண்முகத்தார் கண் கலங்கினார்.
“அதுகளை உந்த அரசியல்வாதியள் நாசமாக்காமல் இருந்தாலே நல்லது. மாவீரர்களு்ககு அவையள் எண்டும் செய்ய வேண்டாம். மாவீரர்களின்டை கனவுக்கு மாறாய் பேசாமல் இயங்காமல் விட்டால் காணும்..” சினப்பட்டார் இரத்தினத்தார்.
“ஸ்ரீலங்கா சுதந்திர தினத்திலை கலந்துகொள்ளுற சம்பந்தருக்கு முள்ளிவாய்க்கால் மக்களுக்கு அஞ்சலி செலுத்தவும் நேரமில்லை… மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தவும் நேரமில்லை. மாவீரர் தினத்தை கொண்டாடுறதைப் பற்றி சிங்கள அரசுக்கு எடுத்துரைக்கவும் நேரமில்லை..” குமுறலாக சொன்னான் உருத்திரன்.
“எங்களுக்காக சண்டை பிடிச்சு மாண்டு போன நாப்பதாயிரம் பேருக்கு எப்ப நாங்கள் சுதந்திரமாய் விளக்கு ஏத்திற காலம் எப்ப வரும்..?” பக்தியுடனும் கனவுடனும் கேட்டான் இலட்சுமனன். “எங்களுக்கு சுதந்திரம் கிடைக்கிற காலத்திலைதான்..” என்றபடி எழுந்தார் இரத்தினத்தார்.
நாவல் மரத்தின் பின்புறமாக பூத்திருந்தது ஒரு கார்த்திகை மலர்.
-துளியம்-
முக்கியமான செய்திகளை உடனுக்குடன் அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்








