Breaking News

நிறைவேற்றப்படாத ஜெனிவா வாக்குறுதிகள் – ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீது இன்று விவாதம்



சிறிலங்காவின் அனைத்துலக கடப்பாடுகள் என்ற தலைப்பிலான நாடாளுமன்ற ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று கொண்டு வரவுள்ளது.

இந்தப் பிரேரணை மீதான விவாதம் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று பிற்பகல் 2 மணி தொடக்கம், மாலை 7 மணி வரை இடம்பெறவுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது அமர்வு, எதிர்வரும் 27ஆம் நாள் ஆரம்பமாகி, மார்ச் 24ஆம் நாள் வரை நடைபெறவுள்ள நிலையிலேயே இந்த ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.

சிறிலங்காவின் தற்போதைய நிலைமை, முன்னேற்றங்கள், இன்னமும் நிறைவேற்றப்படாதுள்ள ஜெனிவா தீர்மானத்தின் வாக்குறுதிகள் தொடர்பாக இந்த விவாதத்தில் கவனம் செலுத்தப்படவுள்ளது.

ஜெனிவா தீர்மானத்தின் அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கமைய, சிறிலங்கா அரசாங்கம் செயற்படாமையினால், வடக்கில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள், மற்றும் சிறிலங்கா படையினரால் காணிகள் அபகரிக்கப்பட்டோர் தொடர் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், இன்றைய விவாதம் இடம்பெறவுள்ளது.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில், இரவுபகலாக நான்கு இடங்களில் தொடர் போராட்டங்கள் பொதுமக்களால் முன்னெடுக்கப்படும் விவகாரம் இன்று நாடாளுமன்றத்தில் தீவிரமாக எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.