Breaking News

மலையக மக்களுக்கான வீடமைப்பு திட்டங்களுக்கு இந்தியா நிதி உதவி வழங்கும்: பிரதமர் நம்பிக்கை



நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு பெரும் பங்களிப்பு செய்துவரும் மலையக மக்களுக்கான வீட்டுத் திட்டங்களை ஏற்படுத்தி கொடுப்பதற்கான நிதி உதவிகளை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூடுதல் கவனம் செலுத்துவார் என நம்பிக்கை கொள்வதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

டிக்கோயா கிளங்கள் வைத்தியசாலையை திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி பாராட்டி நோர்வூட் மைதானத்தில் இடம்பெற்ற விசேட கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்ட டிக்கோயா கிளங்கள் வைத்தியசாலை திறந்து வைக்கப்பட்டதன் மூலம் நோர்வுட் மக்களின் பாரிய குறை தீர்க்கப்பட்டுள்ளது. அதன்படி இவ்வைத்தியசாலையை திறந்து வைத்த இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம். அதேபோன்று இந்தியா எம் மீது கொண்டுள்ள அன்பை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள நாம் விரும்புகின்றோம்.

இந்திய வம்சாவழி மக்கள், பெருந்தோட்ட மக்கள் ஆகியோர் இலங்கையின் அபிவிருத்தியில் பெரும் பங்கு வகிக்கின்றனர். அதேபோன்று நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டிற்கு முக்கிய பங்காற்றிய மலையக மக்கள் காணியற்ற நிலையில் வாழ்ந்து வந்தனர். அந்த குறைப்பாட்டை தீர்க்கும் வகையில் அவர்களுக்கு ஏழு பேர்ச் காணி வழங்கப்பட்டது. எதிர்காலத்தில் இந்த நடவடிக்கையை மேலும் துரிதப்படுத்த எதிர்பார்த்துள்ளோம்.

அதன்படி மக்களுக்கு வீட்டுத் திட்டங்களை ஏற்படுத்தி கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கவுள்ளோம். அதற்கான நிதி உதவிகளை வழங்குவது தொடர்பில் பிரதமர் நரேந்திர மோடி கூடுதல் கவனம் செலுத்துவார் என நாம் நம்புகின்றோம் என்றார்.