Breaking News

காணாமல் போனவர்களைக் கண்டறிய புதிய விசாரணைப் பொறிமுறை..!!



சிறிலங்காவில் போருக்குப் பின்னர் காணாமல் போயுள்ள ஆயிரக்கணக்கானோரைக் கண்டறியும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இரகசியத் தடுப்பு முகாம்கள் பற்றிய குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க விசாரணைக் குழுவொன்று அமைக்கப்படவுள்ளது.

திருகோணமலை- சம்பூரில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போது சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்துள்ளார்.

“போருக்குப் பின்னர் காணாமல்போனவர்கள் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பக் கூடிய இடங்களை இடங்களைக் கண்டறிவதற்கான சிறப்பு பொறிமுறை ஒன்றை உருவாக்கவுள்ளேன்.

சில இடங்களில் இரகசியத் தடுப்பு முகாம்கள் இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து ஆய்வு நடத்த இந்தப் பொறிமுறை அமைக்கப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக, பல்வேறு ஆணைக்குழுக்கள் விசாரணைகளை நடத்தியிருந்தன. இந்த ஆணைக்குழுக்கள், இழப்பீடு வழங்குதல் மற்றும் குற்றவியல் விசாரணைகளை நடத்துவதற்குப் பரிந்துரைத்திருந்தன.

எனினும் இதுவரையில் சிறிலங்கா அரசாங்கம் இந்தப் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் அக்கறை செலுத்தவில்லை. ஆனால் தற்போது சிறிலங்கா அதிபர் இந்த பிரிந்துரைகளை நடைமுறைப்படுத்தப் போவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.