Breaking News

மாத்தையாவையும் 200 போராளிகளையும் கொன்றவர்களே புலிகள்: மாவை

“விடுதலைப்புலிகள் ஜனநாயக மீறலில் ஈடுபட்ட உண்மையே. குறிப்பாக தமிழ் தரப்பையே கொன்றார்கள். மாத்தையாவையும், 200 போராளிகளையும் சுட்டுக் கொன்றார்கள்“

இப்படி சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருக்கிறார் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராசா. கடந்த 9ம் திகதி, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் இதனை அவர் தெரிவித்திருந்தார் என தமிழ்பக்கம் நம்பரகமாக அறிந்தது.

இந்த கூட்டத்தில் மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன் ஆகிய பஙகாளிக்கட்சிகளின் தலைவர்களும், சார்ள்ஸ் நிர்மலநாதன், கோடீஸ்வர், ஸ்ரீநேசன், யோகேஸ்வரன், சரவணவன் உள்ளிட்ட சில எம்.பிக்களும் கலந்து கொண்டிருந்தனர்.

கூட்டத்தின் ஆரம்பத்தில், சார்ள்ஸ் நிர்மலாதன் ஒரு விவகாரத்தை எழுப்பினார். அண்மையில், தென்மராட்சி கிளை பொறுப்பாளர் கே.சயந்தன் கொழும்பில் உரையாற்றியதை சுட்டிக்காட்டி, இவர்கள் எல்லாம் எப்படி இதை கூற முடியும்? கட்சியின் நிலைப்பாடு என்ன என கேள்வியெழுப்பினார்.

இதுமு தொடர்பான பத்திரிகைச் செய்தி


இதனால் கூட்டத்தில் சர்ச்சையேற்பட்டது.

சயந்தன் கூறியதில் என்ன தவறு என மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கேள்வியெழுப்பினர்.ஜனநாயக வழியில் அரசியலில் ஈடுபட்டவர்களை புலிகள் கொன்றார்கள்தானே என அவர்கள் பதில் கேள்வியெழுப்பினர்.

இடையே குறுக்கிட்ட மாவை சேனாதிராசா சற்று உணர்ச்சிவசப்பட்டு- புலிகள் தமது இயக்கத்தினரையே கொன்றார்கள் தானே, மாத்தையாவையும் 200 போராளிகளையும் அவர்கள் கொல்லவில்லையா என பதில் கேள்வி கேட்டிருக்கிறார்..

இதற்கு சி.சிறீதரன், சார்ள்ஸ் நிர்மலாதன் போன்றவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். “நீங்கள் சொல்லும் கொலைகளையெல்லாம் செய்ததாக தலைவர் உங்களிடம் வந்து சொன்னாரா“ என சூடாக கேள்வியெழுப்பினர்.



இந்த விவகாரத்தால் கூட்டத்தில் சூடான நிலைமை நீடித்தது.

புலிகளின் விவகாரத்தை இப்பொழுது தேவையற்ற விதமாக எதற்காக இழுக்கிறீர்கள்? இப்போது நம் முன்னே இருக்கும் பணிகள் இவைதானா? வீட்டு திட்ட பிரச்சனைகள் இருக்கிறது, ஜெனீவா கூட்டத் தொடர் ஆரம்பிக்கவுள்ளது, அதைப்பற்றி பேசாமல் இப்போது பேசப்பட வேண்டிய விடயம் இதுதானா என சாள்ஸ் நிர்மலநாதன், சிறிதரன் ஆகியோர் கேள்வியெழுப்பினர்.

கனடா தூதரையும் அழைத்து, ஜெனீவா விவகாரம் குறித்து ஒரு கூட்டத்தை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த சில எம்.பிகள் இந்த விடயத்தில் தாம் வாய் திறக்காமல் இருந்தாலும், மாவை சேனாதிராசா குறிப்பிட்ட கருத்தில் தமக்கு உடன்பாடில்லையென்றும், இதைப்பற்றி பேசி மேலதிக சர்ச்சையை வளர்க்க விரும்பவில்லையென்பதால் கூட்டத்தில் இதைப்பற்றி பேசவில்லையென்றார்கள்..