மகிந்த குடும்பத்தினர் உட்பட 12பேருக்கு எதிராக ஊழல், மோசடி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் இலஞ்ச, ஊழல், மோசடிகள் குறித்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட 12 பேருக்கு எதிராக இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிடம் மக்கள் விடுதலை முன்னணியினர் (ஜே.வி.பி) நேற்று முறைப்பாடொன்றைப் பதிவு செய்தனர்.
சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தில் இருந்துகொண்டு இலஞ்ச, ஊழல், மோசடிகளில் ஈடுபட்ட அனைத்து அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியே, ஜே.வி.பி.யினர் இந்த முறைப்பாட்டைப் பதிவு செய்தனர். அதேபோன்று, இந்த குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள எவரையும் இந்த நாட்டை விட்டு தப்பிச் செல்லாதவாறு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஜே.வி.பி, தனது முறைப்பாட்டில் கோரியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், வர்த்தக மற்றும் வாணிபத்துறை முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ, துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் திட்டமிடல் முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன உட்பட 11பேரும் கார்ல்டன் சுப்பர் ஸ்போட் க்ளப் நிறுவனமுமே இந்த முறைப்பாட்டில் பட்டியலிடப்பட்டுள்ளன.
இந்த முறைபாட்டைப் பதிவு செய்வதற்காக ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜித்த ஹேரத், சுனில் ஹந்துன்நெத்தி மற்றும் சட்டத்தரணி சுனில் வட்டகல ஆகியோரே, இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்குச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.








