Breaking News

நல்லிணக்கம், சமாதானத்துக்கு பாப்பரசர் அழைப்பு

யுத்தத்தின் பின்னர் விட்டுச்செல்லப்பட்ட விடயங்களை வைத்துக்கொண்டு நீதியை நிலைநாட்டுவது என்பது இலகுவான காரியமல்ல. எனினும், அதனை வெற்றிகொள்ள நல்லிணக்கம் மற்றும் சமாதானம் என்ற விடயங்களில் இலங்கை கவனம் செலுத்த வேண்டும், 


பல்வேறு இனங்கள் வாழும் நாடு என்ற வகையில் இலங்கையில் சகவாழ்வு மேம்படுத்தப்பட வேண்டும் என்று இலங்கைக்கு நேற்று விஜயம் செய்த பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் அவர்கள் தெரிவித்தார். 

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த பாப்பரசர், அங்கு அனைவர் மத்தியிலும் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

பாப்பரசரின் உரையின் முழு விவரம் வருமாறு, 

'உங்கள் அன்பான வரவேற்புக்கு எனது நன்றிகள். நான் இலங்கைக்கு வரும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன்.நாம் ஒன்றாக இருக்கப்போகும் இந்த நாட்களையிட்டு சந்தோஷமடைகின்றேன். இலங்கை அழகானதொரு நாடு. அதனால்தான் அது இந்து சமுத்திரத்தின் முத்து என அழைக்கப்படுகிறது.  இதைவிடவும் இந்த நாட்டு மக்களின் இனிய சுபாவங்களும் கலாசார மற்றும் சமய மரபுகளின் பல்வகைமைகளும் உலகளவில் பேசப்படுபவை. ஜனாதிபதி அவர்களே, உங்களின் புதிய பொறுப்புக்கு எனது வாழ்த்துக்கள். 

எமக்கு கௌரவமளித்துள்ள உங்களது அரசாங்கத்தின் மதிப்புமிக்க உறுப்பினர்களுக்கும் சிவில் அதிகாரிகளுக்கும் நான் எனது வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன். விசேடமாக இந்த நாட்டின் மக்களது வாழ்வில் முக்கியமான பாத்திரம் வகிக்கும் முக்கிய சமய தலைவர்கள் இங்கு வந்திருப்பதற்கு எனது நன்றிகள். விசுவாசிகளுக்கும் இசைக்குழுவினருக்கும் எனது விஜயத்தை சாத்தியமாக்க உழைத்த பலருக்கும் எனது பாராட்டுக்களை நான் தெரிவிக்க விரும்புகின்றேன். 

உங்கள் அன்புக்கும் விருந்தோம்பலுக்கும் உங்கள் எல்லோருக்கும் நான் நன்றி கூறுகின்றேன். எனது இலங்கைக்கான விஜயம் பாப்பரசர் என்ற வகையில் அமைந்தது. கத்தோலிக்க திருச்சபையின் அகில உலக குரு என்ற வகையில் நான் இந்த நாட்டின் கத்தோலிக்க மக்களை சந்திக்கவும் ஊக்குவிக்கவும் அவர்களுடன் இணைந்து பிரார்தனை செய்யவும் வந்துள்ளேன். இந்த விஜயத்தின் மிகப் பிரதான நிகழ்வாக ஆசீர்வதிக்கப்பட்ட ஜோஸப் வாஸ் அவர்களை புனிதராக்கும் நிகழ்வு அமையும். 

ஜோஸப் வாஸ் அவர்களின் தொண்டும் சேவையும் இன, மத வேறுபாடுகளைக் கடந்து சகலரையும் மதிக்கும் பண்பு, இன்றும் எம்மை உற்சாகப்படுத்துவதாகவும் எமக்கு வழிகாட்டுவதாகவும் உள்ளன. மேலும், எனது இலங்கை விஜயம் சகல இலங்கை மக்களுக்கும் திருச்சபையின் அன்பையும் அக்கறையையும் தெரிவிப்பதாகவும் இந்த சமூகத்தின் வாழ்வில் ஆர்வமான பங்குதாரர்களாக இருக்க வேண்டுமென்ற கத்தோலிக்க சமூகத்தின் விருப்பை உறுதி செய்வதாகவும் உள்ளது.

 நாம் வாழும் உலகில் எத்தனையோ சமுதாயங்கள் தமக்குள் சண்டையிட்டுக்கொள்வது தொடர்ச்சியான துன்பமாகவுள்ளது. வன்முறைக்கு காரணமாகவுள்ள பழைய, புதிய கருத்து வேறுபாடுகளையும் வேறு பிரச்சினைகளையும் தீர்த்து, நல்லிணக்கம் காண முடியாது போவதனால் இன, சமய பதற்றங்கள், மோதல்களாக தோன்றுகின்றன. இலங்கையும் பல வருடங்களாக உள்நாட்டு யுத்தத்தின் கொடூரத்தை அனுபவித்தது. அது இப்போது சமாதானத்தை உறுதி செய்யவும் அந்த கொடூரமான காலத்தின் வடுக்களை சுகப்படுத்தவும் செயற்படுகின்றது. 

இந்த மோதலினால் உண்டான பகைமையையும் சந்தேகங்களையும் அநீதிகளையும் கடந்து முன்னேறுவது இலகுவான காரியமல்ல. தீமைகளை வெல்ல நல்லது செய்வதாலும் சமாதானம், நட்புடைமை என்பவற்றை வளர்க்கும் நற்பண்புகளை பேணி வளர்ப்பதனாலும் மட்டுமே இதை சாதிக்க முடியும். பழைய காயங்களை கிண்டிவிடுவதாக இல்லாமல்,  நீதியை சுகப்படுத்தலை ஒற்றுமையை வளர்க்கும் வகையிலான உண்மையை அறிதல், பழையவற்றை மறக்கச் செய்து இதமளிக்கும் செயன்முறையின் ஒரு பகுதியாக வேண்டும். சகலருக்கும் தமது கவலைகளை, தேவைகளை, அவர்களது அபிலாஷைகளை ஆலோசனைகளை தெரிவிக்க சுதந்திரம் இருக்க வேண்டும். 

எல்லாவற்றிலும் முக்கியமாக அவர்கள் ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ள, சட்ட முறையான பல்வகைமைகளை மதிக்க, ஒரு குடும்பமாக வாழ தயாராக இருக்க வேண்டும். மக்கள் ஒருவருடன் ஒருவர் அடக்கமாகவும் திறந்த மனத்துடனும் செவிசாய்க்கையில் அவர்களின் பொதுவான விழுமியங்களும் அபிலாஷைகளும் வெளியே தெரியவரும். அன்பார்ந்த நண்பர்களே, இந்த நாட்டில் இடம்பெறும் நல்லிணக்கம், மீள் கட்டுமானம் என்பவற்றின் நுண்மையான செயன்முறையில் பல்வேறு சமய பாரம்பரியங்களை கொண்டுள்ளன. 

சமூகத்தினர் ஓர் அத்தியவசியமான வகிபாகத்தைக் கொள்ளவேண்டுமென நான் உறுதியாக நம்புகிறேன். இந்த செயன்முறை வெற்றிபெற வேண்டுமாயின் சமூகத்தின் சகல உறுப்பினர்களும் ஒற்றுமையாக பாடுபட வேண்டும். எல்லோருக்கும் பேச இடமளிக்கப்பட வேண்டும். இப்போது பல்வகைமை, பிரச்சினையாகவோ அச்சுறுத்தலாகவோ பார்க்கப்படுவதில்லை. 

அவை இப்போது வளப்படுத்தலுக்கான மூலாதாரமாக பார்க்கப்படுகின்றன. மேலும் நீதிக்கான, நல்லிணக்கத்துக்கான சமூக ஒற்றுமைக்கான பாதை மேலும் தெளிவாக பார்க்கக் கூடியதாயிருக்கும். இந்த வகையில் மீள்கட்டமைத்தலின் பெரும் வேலை, உட்கட்டமைப்புகளையும் மக்களின் பொருளாதார தேவைகளையும் அடக்கியிருக்க வேண்டும். 

ஆனால், கூடுதல் முக்கியமாக மனித கௌரவம், மனித உரிமைக்கான மதிப்பு, சமூகத்தின் சகல உறுப்பினர்களையும் அரவணைத்து செல்லுதலையும் இது கொண்டிருக்க வேண்டும். தமது நிதானமான வார்த்தைகளாலும் நன்மையான காரியங்களாலும் இலங்கையில் அரசியல், சமய, கலாசார தலைமைகள், இலங்கை மக்களின் பொருள்சார்ந்த, ஆன்மிகம் சார்ந்த முன்னேற்றத்துக்கு நிரந்தரமான பங்களிப்பை செய்வர் என நான் நம்பிக்கையுடன் உள்ளேன்' என்று பாப்பரசர் மேலும் கூறினார்.