மகிந்தவிடமிருந்து சுதந்திர தினமும் பறிபோனது
தேசிய சுதந்திர தினம் இந்த முறை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சொந்த ஊரான வீரகெட்டியவில் நடைபெறாது என என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சொந்த ஊரான வீரகெட்டியவில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ம் திகதி தேசிய சுதந்திர தின விழாவின் பிரதான நிகழ்வு நடாத்தப்படவிருந்தது. அதற்கான முன் ஆயத்தப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. எனினும், கடந்த 8ம் திகதி ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்ச தோல்வியைத் தழுவியதனைத் தொடர்ந்து,
சுதந்திர தின நிகழ்வுகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. கொழும்பு பாராளுமன்ற மைதானத்தில் சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெறவுள்ளதாக நீதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். செலவுகளை குறைக்கும் நோக்கில் இவ்வாறு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எளிமையான முறையில் இந்த முறை சுதந்திர தின நிகழ்வுகள் நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.








