வன்முறைகள் இயல்பான தேர்தலை பாதிக்கும் - சர்வதேச மன்னிப்புசபை
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கோபமூட்டல் மற்றும் வன்முறைகள் இடம்பெறுகின்றமை தொடர்பில் சர்வதேச மன்னிப்புசபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த நிலைமையை தவிர்த்து பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அந்த அமைப்பு இலங்கையின் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் தொடரும் வன்முறையில் நியாயமான வாக்களிப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
எனவே அதிகாரிகள் பொதுமக்களின் அரசியல் பங்கேற்புக்கு வழிகளை ஏற்படுத்தவேண்டும்.இதன்மூலமே தேர்தல் தினத்தன்று வாக்காளர்கள் பயமின்றி வாக்களிப்பில் பங்கேற்கமுடியும் என்று சர்வதேச மன்னிப்புசபையின் ஆசிய பசுபிக் வலய உதவிப்பணிப்பாளர் டேவிட் க்ரிபித்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இரத்தினபுரி காவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கி சூடு நீர்கொழும்பில் மனித உரிமை நடவடிக்கையாளர்களின் வீடுகளின் முன்னால் நாய்த்தலைகள் போடப்பட்டமை போன்ற சம்பவங்களை மன்னிப்பு சபை சுட்டிக்காட்டியுள்ளது.
18வது அரசியலமைப்பு திருத்தமும் பயங்கரவாத தடைச்சட்டமும் மக்களின் சுதந்திர நடமாட்டத்தை பாதித்துள்ளன.
அத்துடன் சிறுபான்மை மதங்களுக்கு எதிராகவும் தாக்குதல்கள் தொடர்கின்றன என்று மன்னிப்புசபை குறிப்பிட்டுள்ளது.








