அமைச்சர்களுக்கு இராணுவப் பாதுகாப்பு வழங்க வேண்டாம் - பிரதமர்
அமைச்சர்களுக்கு இராணுவப் பாதுகாப்பு வழங்க வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாதுகாப்புத் தரப்பிற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களுக்கு முப்படையினரின் பாதுகாப்பு வழங்க வேண்டியதில்லை.அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களுக்கு அமைச்சுப் பாதுகாப்புப் பிரிவின் உத்தியோகத்தர்களை மட்டும் கடமையில் ஈடுபடுத்த வேண்டும்.
அதுவும் அமைச்சர்களுக்கு வழங்கப்படும் சாதாரண பாதுகாப்பின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டும்.அமைச்சர்களுக்கு எவ்வாறான பாதுகாப்பு வழங்குவது என்பது குறித்து கமிட்டி ஒன்றின் மூலம் நிர்ணயிக்கப்பட முடியும்.
இந்த கமிட்டியின் ஊடாக அமைச்சர்களின் பாதுகாப்பிற்காக எத்தனை உத்தியோகத்தர்களை நியமிக்க வேண்டும் என்பது பற்றி தீர்மானிக்கப்படும். அமைச்சர்களின் வாகனத்திற்கு பின்னால் ஒரு பாதுகாப்பு வாகனத்தைப் பயன்படுத்தினால் போதும். வாகனத் தொடரணி ஒன்றை பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை.
அமைச்சர்கள் பயணம் செய்யும் போது பொதுமக்களுக்கு பிரச்சினையோ இடையூறோ இல்லாத வகையில் பயணம் செய்ய வேண்டும். அமைச்சர்களுக்கு மேலதிகமாக ஏனையவர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு குறித்தும் நியமிக்கப்பட உள்ள கமிட்டியினால் தீர்மானிக்கப்பட உள்ளது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.








