மஹிந்த குடும்பத்தினர் பதுக்கிய பணத்தை மீட்கும் படலம் ஆரம்பம்!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் அவரின் குடும்பத்தினரும் கடந்த ஆட்சியின்போது அரசாங்க சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்து வெளிநாடுகளில் பதுக்கிவைத்துள்ள மில்லியன் கணக்கான பணத்தை மீட்கும் நடவடிக்கைகளை இந்தியாவும் அமெரிக்காவும் ஆரம்பித்துள்ளன.
இந்த தகவலை அமெரிக்காவில் இயங்கும் இக்கனொமிக் ரைம்ஸ் ஊடகம் இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் அவரும் ராஜபக்ஸவினரும் அரசாங்க சொத்துக்களை கொள்ளையடித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு கொள்ளையடித்த பணத்தில் 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் டுபாயிலுள்ள தனியார் வங்கி ஒன்றில் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான விசாரணைகள் ஸ்ரீலங்கா அதிகாரிகளால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் மற்றும் இந்திய ஊடகங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை 1.064 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ராஜபக்ஸ பெயரிலும் மேலும் 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ராஜபக்ஸ அல்லாத இரண்டு நபர்களின் கணக்குகளிலும் வைப்பிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது ராஜபக்ஸ குடும்பத்தினரின் கொள்ளைகள் மற்றும் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து தகவல்களை அந்நாட்டு உயரதிகாரிகளிடம் பகிர்ந்துகொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ராஜபக்ஸ குடும்பத்தினர் சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளில் பதுக்கியிருக்கும் பணத்தை மீட்பதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் அவர் இந்தியா அமெரிக்கா நாடுகளின் உதவியை நாடியிருந்தது. இதற்கமைய இந்த நாடுகளின் புலனாய்வுத்துறை அதிகாரிகள் இந்த விடயத்தில் தீவிர விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
இந்த நிலையில் ராஜபக்ஸ குடும்பத்தினர் பதுக்கியுள்ள பணம் பற்றிய விவரம் விரைவில் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை டுபாய் வங்கியில் 500 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை மீளப்பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் யார் என்பதை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் வைத்து நேற்று முன்தினம் ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.