வடக்கில் முன்னெடுக்கப்பட்டது தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தமே - ரவிகரன்
வடக்கில் முன்னெடுக்கப்பட்டது, ஒரு அமைப்புக்கு எதிரானது யுத்தம் அல்லவெனவும், அது தமிழ் மக்களுக்கு எதிரான போர் எனவும் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
இது தமிழ் மக்களுக்கு எதிரான போர் என்பதால் தான் படையினர் இன்னமும் தமிழர் பகுதிகளில் நிலை கொண்டிருப்பதாக இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தமிழர்களுக்கு எதிரான இந்த யுத்தத்ததை வெளிக்கொண்டு வருவதில், பல பொறுப்பு வாய்ந்த சர்வதேச ஊடகங்கள் தங்களது கடமையைச் செய்ய தவறிவிட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
யுத்தம் நிறைவடைந்து 6 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் படையினர் தமிழர் பகுதிகளில் நிலை கொண்டிருக்க வேண்டியதன் தேவை என்னவென, அவர் கேள்வியெழுப்பியுள்ளார். தமிழ் இனத்திற்கு எதிரான யத்தமே முன்னெடுக்கப்பட்டதாகவும், தற்போது இது கட்டமைக்கப்பட்ட இன அழிப்பாக நடைபெறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழர் கடற்பரப்பில் தென்னிலங்கை மீனவர்கள் அத்துமீறி, தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதால், தமிழ் மீனவர்கள் வாழ்வாதார நெருக்கடிகளை எதிர்நோக்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழரின் பெரும்பாலான வயற்காணிகள் மணலாறு உள்ளிட்ட பல பகுதிகளில் விடுவிக்கப்படாமல் இருப்பதால் விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.