சுதந்திரக்கட்சி எதிர்க்கட்சி என்ற தகுதியை இழந்துள்ளது - கூட்டமைப்பு
தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொண்டுள்ள சிறிலங்கா சுதந்திரக்கட்சி எதிர்க்கட்சி என்ற தகுதியையும், அந்தஸ்தையும் இழந்துள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.
இதனால் எதிர்க்கட்சி தலைவர் பதவி அக்கட்சிக்கு உரித்தானது இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொண்டுள்ள சிறிலங்கா சுதந்திரக்கட்சி தொடர்பிலும், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நிலைப்பாடுகள் குறித்தும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
தற்போதைய எதிர்க்கட்சி தலைவரான நிமால் சிறிபாலடி சில்வா கௌரவமான முறையில் பதவி விலகி பிரதான எதிர்க்கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு அந்த பதவியை வழங்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
இதுவே ஜனநாயகத்திற்கும், நல்லாட்சிக்குமான அடையாளமாக இருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இரண்டு பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக்கட்சியும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொண்டுள்ளமையால் நாடாளுமன்றத்தில் 3 ஆவது பிரதான கட்சியாகவும், அதிக ஆசனங்களைக் கொண்டுள்ள பிரதான எதிர்க்கட்சியாகவும் தமிழ் தேசியக்கூட்டமைப்பே உள்ளது.
எனவே எதிர்கட்சி தலைவர் பதவியை பெற்றுக்கொள்ளுகின்ற தகுதியும், உரிமையும் தமது கட்சிக்கே இருப்பதாக அவர் தெரிவித்தார். இதேவேளை, இலங்கையில் தமிழ் பேசும் சிறுபான்மையினர் என்ற ரீதியில் ஜனாதிபதியாகவோ, பிரதமராகவோ செயற்பட முடியாது ஆனால் எதிர்கட்சி தலைவராகவேனும் செயற்பட முடியாதா? என கல்வி ராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருகோணமலை கிண்ணியா மத்திய கல்லூரியின் நிர்வாக கட்டிடத்தை அமைச்சர் இன்று காலை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். இன்று இலங்கையின் அரசியலில் பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன.
அந்த மாற்றங்கள் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் நடைபெறுகின்றது. எனவே இந்த நிலையில் ஏன் சிறுபான்மையை சாhந்த ஒருவர் எதிர்கட்சி தலைவராக வர முடியாது என அமைச்சர் வி.ராதாகிருஷ்னண் வினவியுள்ளார். நாடாமன்றத்தில் தமிழர்கள் சார்பில் மறைந்த தலைவர் அமிர்தலிங்கம் எதிர்கட்சி தலைவராக இருந்த வரலாறும் சரித்திரமும் உண்டு.
எனவே இன்று இந்த நிலையில் சிறுபான்மை இனங்கள் ஒன்று சேர்ந்தால் நிச்சயமாக எதிர்கட்சி தலைவராக ஒருவர் வரமுடியும். அப்படியான ஒரு நிலைமை ஏற்பட்டால் மலையக மக்கள் முன்னணி அதற்கு முழு ஒத்துழைப்பையும் வழங்க தயாராகவுள்ளதாக அமைச்சர் தனது உரையில் சுட்டிக்காட்டினார். இதனை அரசியலாக பார்க்காமல் சமூக ரீதியில் சிந்தித்து தமிழர்கள் மத்தியில் ஒற்றுமை ஏற்பட வேண்டும்.
ஆனால் இதனை வைத்துக் கொண்டு ஒரு சிலர் அரசியல் செய்ய முற்படுகின்றார்கள். அதற்கு இடமளிக்க கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.