இலங்கையின் உள்விவகாரங்களில் இந்தியா தலையிடுகிறது! சீன நிபுணர்குழு
இலங்கையின் உள்விவகாரங்களில் இந்தியா தலையீடுவதாகவும் இலங்கையில் சீனாவின் செல்வாக்கை இல்லாது செய்வதற்கு முயற்சிப்பதாகவும் சீன அரசின் ஆதரவு பெற்ற நிபுணர்குழு தெரிவித்துள்ளது.
அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, யாழ்ப்பாணத்துக்கு சென்றமை இலங்கையின் உள்விவகாரங்களின் இந்தியாவின் தலையீட்டை எடுத்துக்காட்டுவதாகவும் அந்த குழு கூறியுள்ளது.
அத்துடன், பட்டுப்பாதையில் சீனாவின் ஆதிக்கத்தை தவிர்ப்பதற்கு இலங்கை, மியன்மார் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளை இந்தியா ஊக்குவிப்பதாகவும் நிபுணர்குழு குறிப்பிட்டுள்ளது.
மோடியின் இலங்கை விஜயத்தின் போது, தமிழர்கள் அதிகமாக வாழும் இலங்கையின் வடபகுதிக்கு பயணித்தமை ஒரு நாட்டின் மீதான இந்தியாவின் தலையீட்டை எடுத்து காட்டுவதாக ஷங்காயிலுள்ள சர்வதேச கல்வி நிறுவனத்தின் ஆய்வாளரான லியு ஷூன்கியின் ஆய்வுக்கட்டுரை தெரிவித்துள்ளதை நிபுணர் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்திய பெருங்கடலில் மூன்று நாடுகளுக்கு மோடி விஜயம் செய்தமை இந்தியாவின் மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கான முயற்சியாகும் என குளோபல் டைம்ஸ் பத்திரிக்கையில் வெளியான கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் நிபுணர் குழு குறிப்பிட்டுள்ளது.