Breaking News

பயங்கரவாதத்தை தலைதூக்க இடமளிக்க போவதில்லை - பிரதமர்

நாட்டில் எந்த ஒரு இடத்திலும் தீவிரவாதம் மீண்டும் எழுவதற்கு இடமளிக்கப் போவதில்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜாதி, மத, இன பேதங்கள் இன்றி அனைத்து மக்களும் சுமுகமாக வாழ்வதற்கான நாடொன்றை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என்று அவர் கூறியுள்ளார். இதற்காக அனைவரும் அப்பர்ணிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

அலரி மாளிகையில் செய்தி ஊடகங்களின் பிரதானிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் கூறியுள்ளார். நாட்டில் நிதி ஒழுக்கத்தை ஏற்படுத்துவது அரசாங்கத்தின் அடுத்த இலக்கு.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் உறுதியளிக்கப்பட்டதன் படி, 19ம் திருத்தச் சட்டம் தற்போதும் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக பல்வேறு தரப்பினர் உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். இந்த மனுக்கள் குறித்து உயர் நீதிமன்றம் தீப்பளித்த பின்னர் அதனை நிறைவேற்றிக் கொள்ள நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் தேர்தல் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில் நாட்டில் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தலைமையில் காரியாலயம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.