Breaking News

யாழில் உள்ள மஹிந்தவின் மாளிகையை பார்த்து அதிர்ந்து போனாராம் மைத்திரி



முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச யாழ்ப்பாணத்தில் கட்டியிருக்கும் அதிசொகுசு மாளிகளைப் பார்த்து தான் மிரண்டு போனதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

 கிழக்கு மாகாண ஒருங்கிணைப்புக்கூட்டம் திருக்கோணமலை மாவட்டக்காரியாலத்தில் நேற்று இடம்பெற்றபோது, பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரை நிகழ்த்தும்போதே  ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

ஜனாதிபதி தொடர்ந்து அங்கு உரை நிகழ்த்துகையில்:

இன்று நான் வட மாகாணத்துக்கு பயணம் செய்து அங்குள்ள மக்களின் நிலைமைகளை நேரடியாக கண்டறிந்தேன் அங்குள்ள நிலைமைக்கு உடனடியாக தீர்வு காணும்படியும் கூறியுள்ளேன். இனிமேல் நாட்டில் தன்னிச்சையான சட்ட ஒழுங்கு, அதிகார துஷ்பிரயோகம், போன்றன இடம்பெறாமல் மக்களுக்கான நாடாக இதனை மாற்றுவேன்.

இலங்கையில் இருக்கும் ஒன்பது மாகாணங்களும் எனது இரு கண்களாகவே பார்க்கிறேன். நான் பதவியில் இருக்கும் வரை அப்படியே பார்த்துக் கொள்வேன். இந்த ஒன்பது மாகாணங்களுக்கும் ஒரு கரண்டி மூலமே நான் என் சேவைகளைப் பகிர்ந்தளிப்பேன். ஒவ்வொரு மாகாணத்துக்கும் ஒவ்வொரு கரண்டி பாவிக்கும் வேறுபாட்டு நிலை என்னிடம் இல்லை

இன்று நான் யாழ்பாணம் சென்றிருந்தபோது கடந்த ஜனாதிபதி கட்டி இருந்த மன்னனுக்கான மாளிகையை பார்வையுற்று அதிர்ந்து போனேன்.

மகிந்த ராஜபக்ச கட்டியிருக்கும் மாளிகையின் பெறுமதி 250 கோடி ரூபா மதிப்புள்ளதாக இருக்கிறது. இது யாருடைய பணம்? மக்களின் பணம். இப்படி வீணடிக்கப்பட்டிருப்பது போன்று இன்னும், இன்னும் எத்தனை இடங்களில் இப்படியான கோடிகள் அநியாயமாக செலவு செய்யப்பட்டிருக்கிறது என்பதனை மக்களுக்கு விரைவில் அறிவிப்போம்.

இப்படியான மாடாமாளிகைகளை மக்களின் தேவைக்காகவே நான் பயன் படுத்துவேன். எனது பாவனைக்கு மாளிகை தேவையில்லை. மக்களுடன் மக்களாக ஒன்று பட்டு வாழவே நான் விரும்புகிறேன். நாட்டில் சமாதானம், சுபீட்சம், மக்களுக்கான சுதந்திரத்திரம் ஆகியவை நிறைந்ததாக மாற்றியமைப்பேன். இதற்காக அரசியல் வாதிகளும், அதிகாரிகளும், பொதுமக்களும் ஒன்று பட்டு ஒற்றுமையுடன் முன்வாருங்கள் என்று தனதுரையில் மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கூறினார்.