Breaking News

ரவிராஜ் கொலை சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்த உத்தரவு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கடற்படை வீரர்கள் மூவரையும் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள மூன்று கடற்படை வீரர்களும் நேற்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர். சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்த வேண்டியது அவசியம் என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்தனர். 

அந்த கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் நிரோஷா பெனாண்டோ, அடுத்த மாதம் 7ம் திகதி சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டார். அதுவரை சந்தேகநபர்கள் மூவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.