Breaking News

பொறுப்பற்ற தலைமையால் தமிழர்கள் உய்ய முடியாது

யதார்த்தவாதி வெகுசன விரோதி என்றொரு தத்துவம் உண்டு. இதனை நிதர்சனப்படுத்துவது போல வடக்கின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களின் நிலைமை உள்ளது. 

தமிழர்களின் பிரச்சினை தொடர்பில்; தீர்வு தொடர்பில்; தமிழ் அரசியல்வாதிகள் தொடர்பில் வடக்கின் முதல்வர் உண்மை நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றார். இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருக்கக்கூடிய அரசியல்வாதிகளுக்கு விக்னேஸ்வரன் தொடர்பில் கடுப்பு ஏற்படுகிறது.

முதல்வர் விக்னேஸ்வரனுக்கு அரசியல் அனுபவம் இல்லை என்கின்ற குற்றச்சாட்டு கூட்டமைப்பின் முக்கிய புள்ளிகளால் சொல்லப்படுகிறது. இவ்வாறு விக்னேஸ்வரனுக்கு அரசியல் அனுபவம் இல்லை என்று கூறுவதன் பொருள் ஏமாற்றத் தெரியாது என்றே பொருள் கொள்ள வேண்டும்.  எதுவாயினும் வடக்கு முதல்வர் தம்மோடு ஒத்துப் போகிறாரில்லை என்ற கருத்து வேறுபாட்டை கூட்டமைப்பு மாற்றிக் கொள்ள வேண்டும். 

முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை மற்றும் அவரின் செயற்பாடு தொடர்பில் அவர் மீது தமிழ் மக்கள் நன்மதிப்பு வைத்துள்ளனர். இதனை மறந்து, வடக்கின் முதல்வரை ஒதுக்கி விட வேண்டும் என்று கூட்டமைப்பு நினைக்குமாயின் யானை தன் தலையில் மண்ணை அள்ளி கொட்டிய கதையாகவே நிலைமை முடியும்.

எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தங்களை நம்பி வாக்களித்த தமிழ் மக்களுக்கு ஏதேனும் நன்மை செய்ய நினைத்தால், முதல்வர் விக்னேஸ்வரனுடன் உடன்பட்டு தமிழ் மக்களுக்கு சேவை ஆற்றுதல் என்ற உறுதியை எடுப்பதே பொருத்தம். தமிழ் மக்களைப் பொறுத்தவரை அவர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். 

எனினும் தாங்கள் எதிர்கொள்ளும் பொதுப் பிரச்சினைகளை யாரிடம் எடுத்துக் கூறுவது என்று தெரியாமல் தத்தளிக்கின்றனர். மக்கள் தங்கள் பிரச்சினைகளை எடுத்துக் கூறி தீர்வு காண்பதற்கான ஏற்பாடுகள் எதுவும் இல்லை. இன்றுவரை பிரதேச சபைகள் உள்ளிட்ட உள்ளூராட்சி அமைப்புகளின் இயங்குநிலை திருப்தியற்றதாகவே உள்ளது. எங்கு பார்த்தாலும் கழிவுப் பொருட்கள் கொட்டப்படுகின்றன. பொறுப்பற்ற செயல்கள் தலைவிரித்து ஆடுகின்றன. 

நாளுக்கு நாள் வீதி விபத்து. ஒவ்வொரு நாளும் வடக்கின் எங்கோ ஒரு மூலையில் விபத்து மரணம் நடந்து கொண்டே இருக்கிறது. முதியவர்கள், உடல் நலக்குறைவு உடையோர் வீதியில் இறங்க முடியாது என்ற அளவில் நிலைமை இருக்கும்போது, போக்குவரத்துப் பொலிஸார் ஏ9 வீதி முழுவதும் மரத்தில் மறைந்து நின்று வரிப்பத்திரம், காப்புறுதிப் பத்திரம் சோதிப்பதில் ஆர்வம் கொண்டுள்ளனர். வாகன வரிப்பத்திரமும், காப்புறுதிப்பத்திரமும் இருந்தால் வீதி விபத்து முற்றாகக் குறையும் என்பது போக்குவரத்துப் பொலிஸாரின் நினைப்பா? அல்லது மேற்குறித்த சோதனை ஒரு நல்ல சுயதொழில் முயற்சி என்ற எண்ணமா? என்பது அறியப்பட வேண்டும். 

எங்கும் வீதி விபத்து நடக்கும்போது, போக்குவரத்துப் பொலிஸாரின் வரிப்பத்திரச் சோதனை ஒரு தேவையற்ற செயல் மட்டுமன்றி பயணத் தடையையும் ஏற்படுத்துகின்றது. எனவே இவை தொடர்பில் எங்கள் அரசியல் தலைமைகள் கூடி ஆராய வேண்டும். எதுவும் செய்யாமல் மேடைப் பேச்சோடு அரசியல் நடத்த நினைத்தால் சிங்களவர்கள் எங்களை அழித்ததை விட, தமிழ் அரசியல் தலைமைகள் எங்களை இன்னமும் ஒருபடி மேலாக அழிப்பர் என்பதை தமிழ் இனம் அறிவதில் காலதாமதம் காட்டக் கூடாது.

-வலம்புரி ஆசிரியர் தலையங்கம்