Breaking News

கூட்டமைப்பு அவசரமாக ஜனாதிபதியை சந்தித்தது எதற்காக?

பாராளுமன்றம் எந்த வேளையிலும் கலைக்கப்படலாம் என்ற நிலை காணப்படும் பின்னணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள்
நேற்று முன்தினம் அவசரமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துப் பேசியுள்ளார்கள். இந்தச் சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் கலந்துகொண்டிருந்தார்.

“ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடம்பெற்ற இச்சந்திப்பில் நிரந்தர அரசியல் தீர்வொன்றை அடைவதற்கு எடுக்கவேண்டிய முயற்சிகள் குறித்துப் பேசப்பட்டது. தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை அடையக்கூடியதும் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடியதுமான அரசியல் தீர்வை அடைவதற்கான பொறிமுறைகளும் மற்றைய தேவைகளுக்கான நடவடிக்கைகளும் சம்பந்தமாக உரையாடப்பட்டது. வடக்கு கிழக்கில் மக்கள் எதிர்நோக்கும் முக்கியமான சில பிரச்சினைகள் குறித்தும் ஆராயப்பட்டது” என இச்சந்திப்பையடுத்து கூட்டமைப்பின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தத் திடீர்ச் சந்திப்பு எதற்காக என்பதையிட்டு தமிழ் சிவில் சமூக முக்கியஸ்த்தராக குமபரவேல் குருபரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்: “பாராளுமன்றத் தேர்தலின் பின்னரே அரசியல் தீர்வு பற்றிய பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகும் என்று கூட்டமைப்பு கூறியிருந்தது. அப்படியென்றால் பாராளுமன்றம் விரைவில் கலைக்கப்படலாம் என்று இருக்கின்ற சூழலில் ஏன் இந்த திடீர் பேச்சுவார்த்தை?

இதற்கு இரண்டு காரணங்கள் கூறப்படலாம்:

1) தமிழர்களுடன் பேசுகிறோம் என்று சர்வதேச சமூகத்திற்கு (குறிப்பாக ஜெனீவா அமர்வு நடைபெறுவதற்கு முன்னர்) காட்ட வேண்டிய சிறிசேனவின் தேவை.

2) பொதுத் தேர்தலுக்கு முன்னர் சிறிசேனவுடன் பேச்சுவார்த்தை தொடங்கி விட்டோம் எனத் தமிழ் மக்களுக்கு காட்ட வேண்டிய கூட்டமைப்பின் தேவை. (சிறிசேன ஒற்றையாட்சியைத் தாண்டி வர தயார் எனக் கூட்டமைப்பு ஏற்கனவே பிரச்சாரம் தொடங்கி விட்டது).

இந்த இரண்டு காரணங்களினாலும்தான் பேச்சுக்கள் இடம்பெற்றன என அவர் கூறுகின்றார்.

பாராளுமன்றம் கலைக்கப்படவுள்ள நிலையில் ஜனாதிபதியுடன் பேச்சுக்களை நடத்தி உடனடிப் பிரச்சினைகளுக்கோ அரசியல் பிரச்சினைகளுக்கோ எந்தத் தீர்வையும் பெற்றுக்கொள்ள முடியாது என்பது கூட்டமைப்பினருக்கு நிச்சயமாகத் தெரிந்தேயிருக்கும்.