தேசியக்கொடியை ஏற்றும் காலம் வரும் - ஆனந்தசங்கரி நம்பிக்கை
இலங்கை தேசியக் கொடியை இதுவரையில் நான் எந்தவொரு நிகழ்வி-லும் ஏற்ற வில்லை. அதற்குரிய காலம் விரைவில் ஏற்படும். இதற்காக தேசியக் கொடியை அவமானப்படுத்தும் நபராக என்னைக் கருதவேண்டாம் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்தார்.
பளை விளையாட்டு மைதானத்தை உத்தியோகபூர்வமாகத் திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
தேசியக்கொடி ஏற்றும்படி இன்றைய நிகழ்வில் அறிவுறுத்தப்பட்டது. தேசியக் கொடியை இதுவரை நான் எந்தவொரு நிகழ்விலும் ஏற்றவில்லை. அதற்காக தேசியக் கொடியை அவமானப்படுத்துபவனாக கருதக்கூடாது. தேசியக் கொடியை ஏற்றக்கூடிய காலம் விரைவில் வரும் என்றார்.
நாட்டில் சமாதானத்தினை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த சமாதானத்தினை குழப்பும் வகையில் பல்வேறு கருத்துக்கள் மாணவர் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் அரசியல்வாதிகள் பேசுகின்றனர் எனவும் சுட்டிக்காட்டினார்.
முன்னதாக இந்நிகழ்வில் தேசியக் கொடியை ஏற்றுமாறு ஆனந்தசங்கரியைக் கோரியபோது அவர் அதனை நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.








